தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், எந்த வாக்குறுதிகளை நம்பி தி.மு.க.விற்கு மக்கள் வாக்களித்தார்களோ அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்களின் ஆதங்கம்:
“நான்கு மாதங்களுக்குள் 505 வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிய அரசு இந்தியத் துணைக் கண்டத்திலேயே தி.மு.க. அரசாகத்தான் இருக்கும்” என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெருமைப்பட்டுக் கொண்டுள்ளார் என்றாலும், தாங்கள் எந்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தோமோ அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் ஆதங்கமாக தற்போது இருக்கிறது.
திமுகவின் வாக்குறுதிகள்:
தமிழ்நாட்டில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக தி.மு.க. பல்வேறு வாக்குறுதிகள் அளித்தாலும், “நீட் தேர்வு ரத்து”, “பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்பு”, “சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்”, “மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை”, “நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை மற்றும் ஒரு கிலோ உளுத்தம் பருப்பு”, “70 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு 10 விழுக்காடு ஓய்வூதியம் உயர்த்தி வழங்குதல்”,
கல்விக்கடன் தள்ளுபடி:
“மகளிருக்கு உரிமைத் தொகை மாதம் 1,000 ரூபாய்”, “முதியோர் ஓய்வூதியம் 1,500 ரூபாயாக உயர்வு”, “கல்வித் துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருதல்”, “மத்திய அரசின் இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்சவரம்பினை 25 இலட்சமாக உயர்த்துதல்”, “30 வயதுக்குட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி”,
இதனால்தான், பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் தி.மு.க.:
“அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்”, “போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்”, “கொரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு 4,000 ரூபாய் நிவாரணத் தொகை”, “ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு”, “உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்” போன்ற வாக்குறுதிகள் தான் முக்கியமானவை. இந்த வாக்குறுதிகளை நம்பித்தான் பொதுமக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்தார்கள். அதனால்தான், பத்தாண்டுகளுக்குப் பிறகு தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்:
மேற்காணும் முக்கியமான வாக்குறுதிகளில், 4,000 ரூபாய் நிவாரணத் தொகை, உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் மற்றும் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு ஆகிய வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்பு” என்ற வாக்குறுதி 25 விழுக்காடு தான் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
வாய்ப்பே இல்லை – உள்ளதும் போச்சு:
அதேசமயத்தில், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்று அறிவித்துவிட்டு, அதற்கு வாய்ப்பே இல்லை என்று மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் தெரிவித்து, அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாது என்று சூசகமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றவில்லை என்றாலும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்தும், அதனைத் தராமல் ஆறு மாதத்திற்கு தமிழ்நாடு அரசு ஒத்தி வைத்திருக்கிறது.’உள்ளதும் போச்சு’ என்ற நிலையில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
வெறும் தீர்மானம்தானா?:
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ‘நீட் தேர்வு ரத்து’ என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, தற்போது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டதாக கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்பட்டால்தான் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாக எடுத்துக்கொள்ள முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல, மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாட்டு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதையெல்லாம் சாதனை என்று சொல்வதை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது சாதனை என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனால் மக்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை.
வட்டி அதிகரித்துக்கொண்டே இருக்கு:
தேர்தல் நேரத்தில் தி.மு.க. அளித்த வாக்குறுதியான கல்விக் கடன் ரத்து என்பதை நம்பி பெருவாரியான மக்கள் வாக்களித்தார்கள். இன்றைக்கு அந்தக் கடனுக்கான வட்டி அதிகரித்துக் கொண்டு செல்கிறதே தவிர, அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுவதாகத் தெரியவில்லை. தி.மு.க.வின் இந்த வாக்குறுதியினால் வட்டி அதிகரித்து, மக்களின் கடன் சுமை கூடிக் கொண்டு இருக்கிறது என்பதுதான் யதார்த்தமான உண்மை.
எல்லாருக்கும் பயனில்லை:
மற்றபடி, அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகம் புனரமைத்தல், மதுரையில் கலைஞர் நூலகம் அமைத்தல், ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான பரிசுத் தொகை உயர்வு போன்ற திட்டங்களை எல்லாம், எந்த ஆட்சி வந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் இயல்பாக இடம்பெறக் கூடிய திட்டங்களைப்போல் தான் எடுத்துக் கொள்ள முடியும். இந்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்கவில்லை. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் கிடைக்காது.
வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்:
எனவே,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், எந்த வாக்குறுதிகளை நம்பி தி.மு.க.விற்கு மக்கள் வாக்களித்தார்களோ அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, பெரும்பாலான மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்ற, ஏழையெளிய மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.