துப்பாக்கி குண்டுகள் முழங்க எஸ்.எஸ்.ஐ.பூமிநாதன் உடல் அடக்கம்..!!

ஆடு திருடும் கும்பலால் கொலை செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கீரனூர் அருகே ஆடு திருடும் கும்பலால் கொலை செய்யப்பட்ட நவல்பட்டு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனைக்கு பிறகு சோழ மாநகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது சட்டம் ஒழுங்கு துறை கூடுதல் டிஜிபி பி. தாமரைக்கண்ணன், திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் (பொறுப்பு)ஜி. கார்த்திகேயன், திருச்சி சரக டிஐஜி சரவணன் சுந்தர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியதுடன் பூமிநாதன் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர் பூமிநாதன் உடல் வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சோழ மாநகர் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு கிறிஸ்தவ முறைப்படி இறுதிச் சடங்கு நடைபெற்றது. முன்னதாக போலீஸார் அணிவகுப்பு மற்றும் அரசு முழு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக கூடுதல் டிஜிபி பி.தாமரைகண்ணன் அளித்த பேட்டி: காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் கொலையாளிகள் குறித்து துப்பு கிடைத்துள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.

பூமிநாதன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிதி உதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் உடனடியாக வழங்கப்படும். ஆடு திருடர்களை பிடிக்க பூமிநாதன் தனியாக செல்லவில்லை. மற்றொரு காவலரோடு இணைந்து தான் சென்றார். அந்த காவலர் வழி மாறி பின் தங்கி விட்டார் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே