பண்டிகை காலங்களில் திரையிடப்படும் சிறப்புக் காட்சிகளுக்கு சிறப்புக் கட்டணம் : அமைச்சர் கடம்பூர் ராஜு

ஆன்லைன் மூலம் தமிழக அரசு திரைப்பட டிக்கெட் விற்பனை செய்யும் விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எட்டப்பட்டிருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளில் அரசே ஆன் லைன் மூலம் திரைப்பட டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தர்பார் படத்தால் நஷ்டம் ஏற்பட்ட விவகாரத்தில் விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அவர்களுக்கு உரிய உதவி வழங்கப்படும்.

ஆன்லைன் மூலம் அரசே டிக்கெட் விற்பனை செய்யும் விவகாரத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. விரைவில் விலை நிர்ணயிக்கப்படும்.

பண்டிகை காலங்களில் வெளியாகும் திரைப்பட டிக்கெட் விலையை நிர்ணயம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் திருட்டு வி.சி.டி.யை ஒழிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், திருட்டு விசிடியை ஒழிக்க அரசால் மட்டும் முடியாது எனவும்; திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மூன்று துறையினரும் ஒத்துழைத்தால் தான் திருட்டு வி.சி.டி.யை அரசால் கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே