விசாரணை சரியான திசையில் செல்ல வேண்டுமானால் பாலியல் புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபியை கட்டாயம் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: அரசு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டிஜிபியை கட்டாயம் இடைநீக்கம் செய்தால் மட்டுமே இந்த விசாரணை எவ்வித குறுக்கீடும் இல்லாமல் சரியான திசையில் செல்லும். எனவே இந்த விசயத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வலியுறுத்தியுள்ளார்.

பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சிறப்பு டிஜிபி மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாகா குழுவும் தனியாக விசாரித்து வருகிறது.

நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இந்த விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது புகார் அளிக்க வந்த பெண் எஸ்பியை தடுத்த செங்கல்பட்டு எஸ்பி மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட சிறப்பு டிஜிபியை இடைநீக்கம் செய்யாதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் போலீஸாருக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ், தமிழக அரசு தரப்பில் அரசு ப்ளீடர் வி.ஜெயப்பிரகாஷ் நாராயணன், சிபிசிஐடி போலீஸார் தரப்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் முகம்மது முழம்மில் ஆகியோர் ஆஜராகினர். சிபிசிஐடி போலீஸார், குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான முதற்கட்ட விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதையடுத்து நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஏற்கெனவே இந்த வழக்கில் முதல் நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறப்புடிஜிபியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என இந்த நீதிமன்றம் அரசுக்குவலியுறுத்தி இருந்தது. ஆனால் இதுவரை அந்த மூத்த அதிகாரி மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது மட்டுமே அவருக்கு எதிரான நடவடிக்கையாக கருத முடியாது. செங்கல்பட்டு எஸ்பியை இடைநீக்கம் செய்யும்போது சம்பவத்துக்கு காரணமான மூத்த ஐபிஎஸ் அதிகாரியையும் கட்டாயம் இடைநீக்கம் செய்தால் மட்டுமே விசாரணை எவ்வித குறுக்கீடும் இன்றி சரியான திசையில் செல்லும்.

ஏனெனில் உயர் பதவி வகிக்கும் அதிகாரியை, எஸ்பி அந்தஸ்தில் உள்ள சிபிசிஐடி அதிகாரி விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்த சூழலில் அந்த அதிகாரியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என நீதிமன்றமும் தனது எண்ணத்தை வெளிப்படுத்தியும் அரசு இதுவரை அதற்கு மதிப்பளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மிக முக்கிய வழக்காக எடுத்து இதை உயர் நீதிமன்றமும் கண்காணித்து வருகிறது. சிபிசிஐடி போலீஸாரின் அறிக்கையைப் பார்க்கும்போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய அனைத்து முகாந்திரமும் உள்ளது. அந்த அதிகாரியை இடைநீக்கம் செய்ய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே பொதுமக்கள் மத்தியிலும் விசாரணை நேர்மையாக, வெளிப்படையாக நடைபெறுகிறது என்ற எண்ணம் வெளிப்படும்.

எனவே இந்த உத்தரவுக்கு மதிப்பளித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கூடுதல்அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,என உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 23-க்கு தள்ளி வைத்துள்ளார்.

வழிமறித்த எஸ்பியிடம் விசாரணை

இதற்கிடையே பெண் எஸ்பியை சுங்கச்சாவடியில் வழிமறித்ததாக மற்றொரு எஸ்பி இடமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து விசாரணைக்காக சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் புகாருக்குள்ளான டிஜிபி கடந்த 13-ம் தேதி நேரில் ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி பிலிப், வழக்கின் விசாரணை அதிகாரி எஸ்பி முத்தரசி ஆகியோர் நேரடியாக விசாரணை நடத்தினர்.

மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எஸ்பிக்கும் சிபிசிஐடி சம்மன்அனுப்பியது. செங்கல்பட்டு எஸ்பியாகஇருந்த அவர் மீது, பரனூர் சுங்கச்சாவடியில் அதிரடிப் படையினருடன் வந்து பெண் ஐபிஎஸ் அதிகாரியை சென்னைக்கு செல்ல விடாமல் தடுத்து, அத்துமீறியதாக புகார் பதிவாகி உள்ளது. அவர் மீது கொலை மிரட்டல், முறையற்ற தடுப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்மன் அனுப்பப்பட்டதை தொடர்ந்து எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்றுகாலை எஸ்பி நேரில் ஆஜரானார்.அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சிபிசிஐடி விசாரணைக்கு தமது வழக்கறிஞருடன் எஸ்பி ஆஜராகியிருந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே