சீனாவின் வூகானில் இருந்து 324 இந்தியர்களுடன் சிறப்பு ஏர்-இந்தியா விமானம் டெல்லி வந்தடைந்தது!

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சீனாவில் இதுவரை 259 பேர் இறந்துவிட்டதாகவும், 11000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதட்டமான சூழலில் சீனாவில் வசித்து வரும் இந்தியர்களை பத்திரமாக இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது.

அதனடிப்படையில் ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம் டெல்லியிலிருந்து புறப்பட்டு சீனாவின் வுஹான் நகரத்திற்கு சென்றது.

இந்த விமானத்தில் 5 பேர் கொண்ட மருத்துவ குழுவும், 15 விமான ஊழியர்களும் தக்க பாதுகாப்புடன் சென்றனர்.

வுஹான் நகரத்தில் இருந்து 324 இந்தியர்களை ஏற்றிய ஏர் இந்தியா விமானம் இன்று காலை 7:30 மணிக்கு டெல்லியில் தரையிறங்கியது.

விமானத்தில் பயணம் செய்த அனைவரும் மாஸ்க் அணிந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்தியா திரும்பிய அந்த 324 பேரும் மானேசரில் உள்ள முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு 14 நாட்கள் அவர்களை தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே