சூரரைப் போற்று OTT விவகாரம்: சூர்யாவுக்கு இயக்குநர் ஹரி வேண்டுகோள்!

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஓடிடி தளங்களில் புதிய படங்கள் ரிலீசாகத் தொடங்கியிருக்கின்றன.

நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என காத்திருந்த நிலையில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என்று சூர்யா சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார்.

சூர்யாவின் இந்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் சூர்யாவின் ‘அருவா’படத்தை இயக்க இருக்கும் இயக்குநர் ஹரி, சூர்யாவுக்கு கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, ‘உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள் ; ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி. ஓடிடியில் அல்ல.

நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைதட்டல்களால் தான், நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம்.

சினிமா எனும் தொழில் நமக்கு தெய்வம். தெய்வம் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் தியேட்டர் என்கிற கோவிலில் இருந்தால் தான் அதற்கு மரியாதை.

படைப்பாளிகளின் கற்பனைக்கும், உழைப்புக்கும் ஒரு அங்கீகாரம்.

தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால், சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்.’ இவ்வாறு இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே