சென்னையில் உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு காலமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 25) காலை 11 மணிக்கு அடக்கம் செய்யப்படவுள்ளது.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் அவரது உடல் எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் இருந்து அவசரஊர்தி வாகனம் மூலம் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ரசிகர்கள், திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அவரது சொந்த ஊரான சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள பூர்விக வீட்டுக்கு சனிக்கிழமை அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படவுள்ளது.

கர்நாடகா அரசு மரியாதை

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கர்நாடகா அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அங்கு அரசு கட்டடங்களில் உள்ள தேசிய மூவர்ண கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, எஸ்.பி.பி மறைவுத் தகவலை செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பிற்பகல் உறுதிப்படுத்திய அவரது மகன் எஸ்.பி. சரண், “எஸ்.பி.பி எல்லோருடைய சொத்து.

அவரது பாடல் இருக்கும்வரை அவர் இருப்பார். நீங்கள் எல்லோரும் இருக்கும்வரை எங்களுடைய அப்பா இருப்பார்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை பகல் 1 மணியை கடந்த நிலையில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், பிறகு வைரஸ் தொற்று நீங்கிய பிறகு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நுரையீரல் உள்ளிட்ட பிற உறுப்புகளில் உள்ள தொற்று குணமடைய அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனா தொற்று இல்லை: பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி

அவரது மறைவுச் செய்தி தொடர்பான தகவலை செய்தியாளர்களிடம் வெளியிட்ட எம்ஜிஎம் மருத்துவர், “சென்னையை அடுத்த தாமரைபாக்கத்தில் உள்ள அவரது சொந்த இடத்தில் இறுதிச்சடங்கு நடக்கிறது.

எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. எனவே, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை இல்லை” என்று தெரிவித்தார்.

மருத்துவமனை அறிக்கை என்ன கூறுகிறது?

கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி.பி, தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து பிறகு வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் உயிர்காக்கும் கருவிகளின் அதிகபட்ச உதவி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சிகிச்சைபெற்றுவரும் எம்.ஜி.எம். மருத்துவமனை தெரிவித்தது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எஸ்.பி.பி. அப்போது வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம், தான் நலமுடன் இருப்பதாகவும் யாரும் தொலைபேசியில் அழைத்து விசாரிக்க வேண்டாமென்றும் கூறியிருந்தார்.

அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு அவரது உடல்நிலை சிறிது சிறிதாக மேம்பட்டது.

கொரோனா தொற்று பரிசோதனையில் நெகடிவ் என முடிவு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை 1.04 மணிக்கு உயிரிழந்ததாக தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே