ஏகாம்பரநாதர் கோயிலின் வெள்ளிப் பல்லக்கின் பலகை மட்டுமே மிஞ்சியதால் அதிர்ச்சி..!!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் நகைகளை நகை சரிபார்ப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் தங்கம், வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

அந்த நகைகளை 3 மாதத்திற்கு ஒருமுறை, நகை சரிபார்ப்பு அலுவலர்கள் ஒவ்வொரு கோயிலாக சென்று ஆய்வு செய்வது வழக்கம்.

அந்த ஆய்வின்போது, கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நகை, ஏற்கனவே உள்ள நகை விவரங்களை இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நகை சரிபார்ப்பு அலுவலர்கள், ஆய்வு பணிக்கு செல்வதில்லை. இது தொடர்பாக ஏதேனும் புகார் வந்தால் மட்டுமே அலுவலர்கள் ஆய்வு செய்துவருவதாக புகார் எழுந்தது.

இதனிடையே ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் நடைபெற்ற முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக திருக்கோயிலின் வைர, வைடூரிய நகைகள் திருடு போனது, வெள்ளிப் பொருள்கள் மாயமானது குறித்தும், முறைகேடுகள் பற்றியும் பக்தர்கள் தொடர்சியாக இந்து அறநிலைய துறையிடம் புகார் தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள நகைகளை, நகை சரிபார்ப்பு அலுவலர் எஸ்.எஸ்.குமார், துணை அலுவலர் சுப்பிரமணி, உதவி தொழில்நுட்ப அலுவலர் ஹரிஹரன் ஆகியோர் திடீரென இன்று சரிபார்ப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் வெள்ளி பல்லக்கில் பலகை மட்டுமே இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பல்லக்கின் எஞ்சிய பாகங்கள் மற்றும் வெள்ளி எங்கே? என விசாரணை நடத்திவருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே