மும்பை கடற்கரையில் கப்பலில் போதை ஒழிப்பு போலீசார் நடத்திய ரெய்டில் பல கோடி மதிப்புள்ள போதை பொருள் சிக்கியது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் உள்ளிட்ட 8 பேரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிவில் ஆர்யன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.மஹாராஷ்ட்டிராவில் தற்போது போதைபொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து போதை ஒழிப்பு போலீசார் கூடுதல் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ஒரு கப்பலில் சிறப்பு விருந்துக்கு சிலர் ஏற்பாடு செய்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை மோப்பம் பிடித்த போலீசார் பயணிகள் போல படகில் ஏறினர்.படகு மும்பையில் இருந்து கிளம்பி கடலுக்குள் பயணித்த போது சிலர் போதை பொருள் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து 8 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த கோகைன் உள்ளிட்ட விலைமதிக்கத்தக்க போதை பொருளை பறிமுதல் செய்தனர். 8 பேரிடம் விசாரணை நடப்பதாக போதைபொருள் மண்டல இயக்குநர் சமீர் வான்கடே நிருபர்களிடம் தெரிவித்தார்.பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானும் சிக்கி உள்ளார். அவரது நண்பர் அர்பாஸ் மெர்சணட், முன்முன் தமேசா, நுபூர் சரிகா, இஸ்மீத் சிங், மொகக் ஜஸ்வால், விக்ராந்த், கோமித் சோப்ரா ஆகியோரிடமும் விசாரணை நடந்தது. பல மணி நேர விசாரணைக்கு பின்னர் விசாரணை முடிவில் ஆர்யன், அர்பாஸ் மெர்சண்ட், முன்முன் தமேசா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், போதை மருந்து இடைத்தரகர்கள் முன்னிலையில் அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.