ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா… அணிவகுக்கும் பிரபலங்கள்… ‘பக்கா ப்ளான்’ ரெடி!

தமிழகத்தின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு அவர் மறையும் வரையிலுமே பக்க பலமாக இருந்தவர் சசிகலாதான். அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஜெயலலிதாவை அணுகவேண்டுமானால், அது சசிகலா மூலமாக மட்டுமே சாத்தியம். இப்படி இருந்த சசிகலாவைத்தான் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் பெயரில் எதிர்க்கத் துணிந்தார். ஆனால், தன்னால் முதல்வரான எடப்பாடியும் தன்னை எதிர்ப்பார் என்று சற்றும் எதிர்பாராத சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு காலம் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை ஆனார்.

தொடர்ந்து தமிழகம் வரும் வழியிலேயே பேட்டி கொடுத்தார். அப்போது “தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன். தொண்டர்களின் அன்புக்கும், மக்களின் அன்புக்கும் நான் எப்போதுமே அடிமை. எம்ஜிஆர் கூறியதைப்போல, ‘அன்புக்கு நான் அடிமை, தமிழ்ப் பண்புக்கும் நான் அடிமை, கொண்ட கொள்கைக்கும் நான் அடிமை’, தமிழ் மக்களுக்கும், தொண்டர்களுக்கும் என்றுமே நான் அடிமை’. அடக்குமுறைக்கு என்றுமே நான் அடிபணிய மாட்டேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அவசர, அவசரமாகத் திறக்கப்பட்டது. அதன்பிறகு அதே அவசர கதியில் மூடப்பட்டது ஏன் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். என் வாகனத்தில் அதிமுக கொடியைப் பயன்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள், காவல்துறையினரிடம் புகார் அளித்திருப்பது அவர்களது பயத்தைக் காட்டுக்கிறது.

அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும். எத்தனையோ முறை அதிமுக சோதனைகளைச் சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டு எழுந்து வந்துள்ளது கட்சி. ஜெயலலிதா வழி வந்த பிள்ளைகளாகிய நாம் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம். மீண்டும் ஆட்சியில் அமரக் கூடாது என ஒரு கூட்டம் தனியாகச் செயல்படுகிறது. அதை முறியடிக்க வேண்டும். மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

ஆனால், சசிகலாவின் அழைப்பை அதிமுக திட்டவட்டமாக எதிர்த்தது. ஒரு தரப்பு சசிகலாவை வைத்துக்கொண்டால் திமுகவை ஈஸியாக ஜெயிக்கலாம் என்று எண்ணுவதாகவும், மற்றொரு தரப்பினர் சசிகலா வந்தால் மீண்டும் கட்சி ஒரு குடும்பத்தின் கையில் சென்றுவிடும் என எண்ணுவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஓபிஎஸ்ஸுக்கும் இபிஎஸ்ஸுக்கும் இடையேயான முரண்பாடு வேறு முடிவுக்கு வந்த பாடு இல்லை. இதனால் சில அரசியல் நோக்கர்கள், பன்னீர்செல்வமே சசிகலாவிடமே சரணடையும் சூழ்நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்கின்றனர். 

இந்த நிலையில்தான் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று சசிகலா மீண்டும் தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். சென்னை திநகர் இல்லத்தில் ஜெயலலிதா உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் பேசிய சசிகலா, “ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும். இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என்று ஜெயலலிதா சொல்லிவிட்டு சென்றார். அதை மனதில் வைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். நானும் அதற்கு உறுதுணையாக நிற்பேன்” எனத் தெரிவித்தார். ஆனால் அதற்கும் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலா அழைப்பு விடுத்தது அதிமுகவினருக்கு பொருந்தாது எனக் கூறி மழுப்பினார்.

இது ஒருபுறம் இருக்க அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் சசிகலா பக்கம் திரும்ப தொடங்கியுள்ளனர். சசிகலா வெளிவரும் முன்பிலிருந்தே தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா சசிகலாவிற்கு சப்போர்ட் செய்து வருகிறார். மேலும், அதிமுகவும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் அதிமுக தலைமை எதற்கும் தலை சாய்க்கவில்லை. இதனால் பொங்கிய பிரேமலதா ஒரு கட்டத்தில் இனி கூட்டணி குறித்து அதிமுகவிடம் கேளுங்கள்; என்னிடம் கேட்காதீர்கள் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

இதைத்தொடர்ந்து இன்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகாவுடன் வந்து சசிகலாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். நன்றி மறப்பது நன்றன்று என்ற எண்ணத்தில் சந்தித்ததாகவும் கூறினார். மேலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் சசிகலாவை அடுத்தடுத்து வீட்டிற்கே சென்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்புகள் தற்போது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்பு ஓய்வதற்குள் அடுத்த கட்ட நடவடிக்கையாக சசிகலா தரப்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், அதிமுக கொடியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், “ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து சசிகலா, அதிமுகவை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பது தெளிவாக புலப்படுகிறது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மேலும், அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளை முதலில் தன் பக்கம் இழுத்து கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவினரை தன்வசப்படுத்த சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது தனது பழைய அரசியல் வியூகத்தை கையில் எடுக்கத் தொடங்கியுள்ளதாகவும், இனி பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே