சேலத்தில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான வசதிகள் உள்ளன: முதல்வர் பழனிசாமி பேச்சு..!!

சேலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதன் பின்பு மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலனால் இயங்கும் அதிநவீனச் சக்கர நாற்காலிகளை முதலமைச்சர் வழங்கினார். தசை சிதைவு, முதுகு தண்டுவடப் பாதிப்பால் கால்கள் செயலிழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கினார்.

பிறகு மேடையில் பேசிய முதல்வர் பழனிசாமி, ” சேலத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் சாலை விரிவாக்க பணிகளும் தொடங்கப்பட உள்ளன. கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. டெல்டா பகுதிகளில் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. கூடுதலாக 5 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் வழங்கப்படும்.

இ-பாஸ் முறையை எளிமையாக்கவும், குறைபாடுகளை களையவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான வசதிகள் உள்ளன. காய்ச்சல் முகாம்கள் மூலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே