கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் மன அழுத்தங்களில் சிக்கித் தவித்த நாட்களையும், அதிலிருந்து மீண்ட விதத்தையும் இப்போது வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துள்ளனர். அந்த பலர் வரிசையில் விராட் கோஹ்லி, ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோருடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ராபின் உத்தப்பாவும் இணைந்துள்ளார்.
இந்திய அணிக்கு 2006ம் ஆண்டு தேர்வான ராபின், 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்காவும் விளையாடி உள்ளார். அதனை தொடர்ந்து அணியில் உள்ளே, வெளியே வந்து போய்க் கொண்டிருந்தார். அப்படி கிரிக்கெட் விளையாடாத காலங்களில் தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் கூட வந்ததாக தெரிவித்துள்ளார்.
அது குறித்து ராபின் உத்தப்பா கூறியதாவது:
எனது வாழ்க்கையில் 2009முதல் 2011ம் ஆண்டு வரை கடினமான காலகட்டங்கள். நான் கிரிக்கெட்டை கூட யோசிக்காத நாட்களாக இருந்தன. என் எப்படி உயிர் வாழ்வேன்? அடுத்த நாள் எப்படி இருக்கும்? என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது? எந்த திசையில் செல்லப்போகிறேன் என்ற யோசனைகளே என்னை ஆக்கமிரத்திருந்தன. தற்கொலை எண்ணங்கள் அடிக்கடி தோன்றும்.
ஆனால் ஏதோ ஒன்று என்னை தடுத்து நிறுத்தியது. அதை டைரியில் எழுதத் தொடங்கினேன். அவற்றை மீண்டும் படிக்கும் போது என்னை புரிந்துக் கொண்டேன். வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வர மற்றவர்களின் உதவியை நாடினேன்.
கிரிக்கெட்டும் அதற்கு உதவி செய்தது. எனது எதிர்மறை எண்ணங்கள் குறித்து எனக்கு வருத்தம் ஏதுமில்லை. ஒருவர் எல்லா நேரமும் நேர்மறையாகவே சிந்தித்துக் கொண்டு இருக்க முடியாது. எதிர்மறையான எண்ணங்களும், அனுபவங்களும் கூட ஒருவரை வடிவமைக்க நிச்சயம் உதவும். சில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் என்று நினைக்கிறேன். அப்போதுதான் வாழ்க்கை சமநிலையில் இருக்கும்.