மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி கைது

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தோழி ரியா சக்ரபோர்த்தி போதை மருந்து தடுப்பு பிரிவு போலிஸாரால் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண வழக்கில் மூன்று நாட்களாகப் போதை மருந்து சம்பந்தப்பட்ட கோணத்தில் ரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சுஷாந்துக்கு போதை மருந்துகள் பெறுவதற்கு உதவியதாகவும், சில நேரங்களில் அதை அவர் உபோயகப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு போதை மருந்து கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 59 கிராம் கஞ்சா மற்றும் அவர்களுக்கு சுஷாந்துடன் இருந்த தொடர்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையிலேயே இந்த விசாரணை தொடங்கியது.

மேலும் ரியாவின் வாட்ஸ்-அப்பில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை ஆராய்ந்ததில் அவர் போதை மருந்து பயன்படுத்துவது குறித்துப் பேசியுள்ள உரையாடல்கள் காவல்துறையினருக்குக் கிடைத்தன. 

அதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை தொடங்கப்பட்டது.

அந்த விசாரணையின் இரண்டாம் நாளில் அவர் போதை மருந்தை சுஷாந்துக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தான் செய்த அனைத்தும் சுஷாந்துக்காக எனவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால் சமீபத்தில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் போதை மருந்துகளைத் தான் பயன்படுத்தியதில்லை என ரியா சொன்னது குறிப்பிடத்தக்கது.

போதை மருந்து தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் சுஷாந்த் சிங்கின் மேலாளர் சாம்யூல் மிராண்டாவும், ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் செளபிக் சக்ரபோர்த்தியும் கஞ்சா வாங்கியதற்கான சாட்சியங்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் சுஷாந்த் சிங்கின் வீட்டில் பணிபுரிந்த திபேஷ் சாவந்த் சுஷாந்த் மற்றும் ரியா கேட்டுக்கொண்டதற்கு இணங்க 165 கிராம் கஞ்சாவை வாங்கி அவர்களிடம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் அவர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கஞ்சா புகைப்பதை தான் பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே