கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்த ரிசர்வ் வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது..!!

கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்த தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக சென்னை  உயர்நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

இந்தியாவில் 1,482 நகர்ப்புற கூட்டுறவு  வங்கிகள் மற்றும் 58 பன்முக மாநிலக் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது அதைத் தொடர்ந்து, மத்திய அரசு இதற்கான அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது.

அதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்வலைகள் தொடங்கிய நிலையில், இந்த அவசர சட்டத்தை ரத்து  செய்யக் கோரி, காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி மற்றும் வேலூர் கூட்டுறவு நகர்புற வங்கி சார்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு குறித்து பதிலளிக்க மத்திய  அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

இந்நிலையில், அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால், மனுவில் அவசரச்சட்டம்  என்று குறிப்பிட்டதற்கு பதிலாக சட்டம் திருத்தம் செய்யக்கோரி கூட்டுறவு சங்கங்கள் சார்பில் மனு  தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க 6  வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

இதற்கிடையே, இந்த மனுக்களை அபராதத்துடன் தள்ளுபடி  செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில், வங்கி  நடவடிக்கையில் ஈடுபடக்கூடிய கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்தும் வகையில் இந்த சட்டம்  கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்கள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த  சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உள்ளதாகவும், இந்த கூட்டுறவு சங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வீதமான சட்டங்கள் உள்ளதால், வங்கி ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கிகளை முழுமையாக கொண்டு வர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை கொண்டு வர மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது என்றும் மத்திய அரசுக்கு முழுமையான அதிகாரம் உள்ளதாவும், இந்த சட்டம் கொண்டு வரப்பட்டத்தில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இரு பழமையான கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்த வழக்குகள் ஆறு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே