இராமநாதபுரம் : பெண்கள் கடல் முறையீடு போராட்டம்

ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்கக் கோரி இராமநாதபுரம் அருகே பெண்கள் சனிக்கிழமை கடல் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியைச் சேர்ந்த 16 மீனவர்கள் உள்ளிட்ட 22 பேர் கடந்த ஆண்டு மீன்பிடி தொழிலுக்காக ஈரானுக்குச் சென்றனர்.

ஈரானில் அவர்கள் பல்வேறு தீவுகளில் தங்கி மீன்பிடித்து வந்த நிலையில், கடந்த மார்ச் முதல் கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் வகையில் அங்கு பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் ஈரானில் பணி வாய்ப்பை இழந்துள்ள ராமநாதபுரம் மீனவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பவும் முடியாமல் பணமின்றி தவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ஈரானில் உள்ள 924 இந்திய மீனவர்களை மீட்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

அப்போது ஈரானில் உள்ள இந்திய மீனவர்களை மீட்க தனிக்கப்பல் வசதி ஏற்படுத்தியுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கப்பல் கட்டணத்தை மீனவர்களே செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் ஊருக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், ராமநாதபுரம் அருகே திருப்பாலை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், ஈரானில் சிக்கியுள்ள தங்களது கணவர்களை மீட்டுத்தரக்கோரி கடல் முறையீடு போராட்டத்தை சனிக்கிழமை நடத்தினர்.

தமிழ்நாடு மீனவர் உரிமைப் பாதுகாப்பு இயக்கத் தலைவர் வழக்குரைஞர் தீரன்திருமுருகன் தலைமையில் நடந்த முறையீடு போராட்டத்தில், திருப்பாலைப் பகுதி மீனவர்களின் மனைவிகள் ஏராளமானோர் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

திருப்பாலைக்குடி காந்திநகர் காளியம்மன் கோவில் தெருவில் கடலை நோக்கித் திரும்பி நின்று, தங்களது
கணவர்களை மீட்டுத்தர வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் உரிமைப் பாதுகாப்பு இயக்கத் தலைவர் வழக்குரைஞர் தீரன் திருமுருகன் கூறுகையில், உச்சநீதிமன்றத்தில் ஈரான்
மீனவர் மீட்பு தொடர்பான வழக்கில் மத்திய அரசு தனியார் கப்பல் மூலம் மீனவர்களை மீட்பதாகக் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஈரானில் உணவுக்கே கஷ்டப்படும் நிலையில் திரும்புவதற்கான கப்பல் கட்டணம் ரூ. 10 ஆயிரத்தை எப்படி கட்டமுடியும்.

ஆகவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு தான் அவர்கள் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே