ரஜினிகாந்த் நவம்பரில் தனது அரசியல் கட்சியைத் தொடங்க அதிக வாய்ப்பிருப்பதாக அவரது நண்பர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் முதல்வர் காமராஜரின் 117-வது பிறந்த நாளையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து ,மரியாதை செய்ய வந்த இடத்தில் இந்தத் தகவலை ஊடகங்களிடம் சொல்லிச் சென்றிருக்கிறார் கராத்தே தியாகராஜன்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ இணையத்துக்காக இன்னும் விரிவாகப் பேசிய கராத்தே தியாகராஜன், ‘ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்ற பொய்ப் பிரச்சாரம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, திமுக வட்டாரத்தில் இந்தத் தகவல் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. அதனால்தான் மீடியாக்கள்கூட ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
ஆனால், உண்மை அதுவல்ல… ஏற்கெனவே உள்ள திட்டப்படி, ரஜினி ஆகஸ்ட் மாதத்தில் கட்சியை ஆரம்பிப்பதாக இருந்தது.
ஆனால், எதிர்பாராத விதமாகக் கரோனா பிரச்சினை வந்துவிட்டதால் கட்சி தொடங்குவதை இரண்டு மாதங்கள் தள்ளிப் போட்டிருக்கிறார். அவரது நெருங்கிய வட்டாரத்திலிருந்து எனக்கு வரும் தகவல்களை வைத்துப் பார்த்தால் அநேகமாக நவம்பர் மாதம் ரஜினி அரசியல் கட்சியைப் பிரகடனம் செய்துவிடுவார்.
அதற்கான வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. சிஏஏவை எதிர்த்துக் குரல் கொடுத்ததும், சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் பலியான ஜெயராஜின் மனைவியை போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்னதும் இதன் வெளிப்பாடுகள்தான்.
தினமும் அவரிடம் பல பேர் அரசியல் பேசி வருகிறார்கள். அதை வைத்து, ‘காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் கட்சிகளோடு ரஜினி கூட்டணி வைப்பார்’ என்றெல்லாம் சிலர் தவறான தவலைப் பரப்பி வருகிறார்கள்.
இப்போதைய நிலையில் ரஜினி அதைப் பற்றி எல்லாம் சிந்திக்கவில்லை. முட்டை பொறித்தால்தானே கோழிக் குஞ்சுகள் எத்தனை என்று எண்ண முடியும்.
முட்டைகளை மட்டும் வைத்துக் கொண்டு இத்தனை குஞ்சுகள் என்று எப்படி கணக்குச் சொல்லச் முடியும்? எனவே, ரஜினி அரசியல் கட்சியைத் தொடங்கி அது ஏற்படுத்தப் போகும் தாக்கத்தைப் பொறுத்துத்தான் கூட்டணி அரசியல் பற்றிப் பேசமுடியும்’ என்றார்.
‘சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து திமுக அணிக்கு 150 சீட்கள் கிடைக்கும்; அதிமுகவுக்கு 75 சீட்கள் கிடைக்கும் என பிரசாந்த் கிஷோர் டீம் வெளியில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ஸ்டாலினிடம், 180 சீட் கிடைக்கும் என்று அவர்கள் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.
பிரசாந்த் கிஷோரைப் பொறுத்தவரை ரஜினி நேரடி அரசியலுக்கு வரமாட்டார் என்று திடமாக நம்புகிறார். ஸ்டாலினிடம் அப்படிச் சொல்லித்தான் இந்தக் கருத்துக் கணிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
அவர்கள் கணக்குப்படியே, ரஜினி அரசியலுக்கு வராமல் இருந்தாலே திமுகவின் செல்வாக்கு இதுதான் என்றால் அவர் அரசியலுக்கு வந்தால் என்னாகும் என்று சிந்திக்க வேண்டும்.
அதேசமயம், ரஜினி நேரடி அரசியலுக்கு வருவது ஏற்கெனவே உறுதியான ஒன்று. பிரம்மாண்ட மாநாடு கூட்டி தனது அரசியல் கட்சியைப் பிரகடனம் செய்வதுதான் அவரது திட்டம்.
கரோனா கட்டுப்பாடுகள் அதற்குத் தடையாக இருக்குமானால், ஓடிடி தளத்தின் வழியாகவே அவர் தனது அரசியல் கட்சியை அறிமுகம் செய்வார்.
அண்மையில் கர்நாடக மாநிலக் காங்கிரஸ் தலைவராக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிகழ்வில் சுமார் 100 பேர் மட்டும்தான் கலந்து கொண்டார்கள்.
ஆனால், ஓடிடி தளம் வழியாக அதை 60 லட்சம் பேர் பார்த்தார்கள். அதுபோல ரஜினி சார் ஓடிடி தளத்தில் தனது அரசியல் கட்சியைப் பிரகடனம் செய்தால் 5 கோடி பேராவது அதைப் பார்ப்பார்கள்.
அவரது அசுர பலத்தைப் பிறகுதான் இங்கிருக்கிறவர்கள் புரிந்து கொள்வார்கள்’ என்று கராத்தே தியாகராஜன் கூறினார்.