அமிதாபுக்கு போன் செய்து நலம் விசாரித்த ரஜினி, விரைவில் குணமடைய ட்வீட்டிய கமல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் அமிதாப் பச்சனுக்கு போன் செய்து நலம் விசாரித்துள்ளார் ரஜினிகாந்த்.
பிரபல பாலிவுட் நடிகர் அபிதாப் பச்சனுக்கும், அவரின் மகன் அபிஷேக்கிற்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் மும்பையில் இருக்கும் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமிதாப், அபிஷேக்கை அனுமதித்த பிறகு நானாவதி மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமிதாபும், அபிஷேக்கும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக திரையுல பிரபலங்களும், ரசிகர்களும் ட்வீட் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் ரஜினிகாந்த் அமிதாப் பச்சனுக்கு போன் செய்து நலம் விசாரித்துள்ளார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக ரஜினி கூறியுள்ளார்.

இதற்கிடையே இரண்டு பச்சன்களும் விரைவில் குணமடைய வாழ்த்தி கமல் ஹாஸன் ட்வீட் செய்துள்ளார். எனக்கு இந்திய மருத்துவர்கள் மீதும், சீனியர் பச்சனின் தன்னம்பிக்கை மீதும் நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் கமல்.
அபிதாப், அபிஷேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர்களின் பங்களாவான ஜல்சாவுக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும் அமிதாப் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய், அவரின் மகள் ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது.
இருப்பினும் ஜெயா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் 14 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். மருத்துவமனையில் இருக்கும் அமிதாப் பச்சன் நலமாக இருப்பதாக மும்பை மாநகர
மேயர் தெரிவித்துள்ளார்.
அபிஷேக் பச்சன் ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ் வெப் தொடருக்கான சவுண்ட் என் விஷன் டப்பிங் ஸ்டுடியோவில் டப்பிங் பேசினார். இந்நிலையில் அந்த ஸ்டுடியோ தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அபிஷேக் தினமும் அந்த ஸ்டுடியோவுக்கு சென்று டப்பிங் பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே