அமமுகவுடன் தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், 70 தொகுதிகள் வரை தேமுதிகவுக்கு ஒதுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளன. இதற்கிடையே வரும் சட்டப்பேரவை தேர்தல் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்.

தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இருப்பினும், தேமுதிகவில் கூட்டணியா தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

புதுச்சேரியில் தனித்து போட்டியிடுவதாக கூறி, அதற்கான வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தனித்து போட்டியிடுவது குறித்து தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது, தனித்து போட்டியிடுவதால் ஏற்படும் நிறை, குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் தனித்து போட்டியிடுவதை விட, கூட்டணி அமைத்து போட்டியிடுவதே சிறந்ததுஎன கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், அமமுகவுடன் தேமுதிக நிர்வாகிகள் நேரில் சந்தித்து 2 கட்டங்களாக ஆலோசனை மேற்கொண்டனர்.

குறிப்பாக, நேற்று முன்தினம் இரவில் நடந்த பேச்சுவார்த்தையில் தேமுதிகவுக்கான தொகுதிகள் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 70 தொகுதிகள் வரையில் ஒதுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜயகாந்த் இன்று அறிக்கை

இதுதொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, ”தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழலில் தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசித்தபோது, பெரும்பாலான நிர்வாகிகள் கூட்டணியை வைத்து போட்டியிட விருப்பம் தெரிவித்தனர்.

அதன்படி, அமமுகவுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சுமார் 70 தொகுதிகள் வரையில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். தேர்தலும் நெருங்கவுள்ளதால், இனியும் தாமதிக்க கூடாது என கட்சியின் தலைமையும் முடிவு செய்துள்ளது.

எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இன்று மாலையில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்” என்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே