த்ரிஷாவுக்கு தயாரிப்பாளர் சிவா எச்சரிக்கை

நடிகை த்ரிஷாவுக்கு பிரபல தயாரிப்பாளர் எச்சரிக்கை விடுத்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை த்ரிஷா நடித்துள்ள படம், பரமபதம் விளையாட்டு. 24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்கியுள்ளர்.

ரிஷி, வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று காலை நடந்தது.

இதில் படத்தின் நாயகி த்ரிஷா கலந்து கொள்ளவில்லை. படத்தில் பெரிய ஹீரோ இல்லை என்பதால் அவர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் இதன் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய, தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, நடிகை த்ரிஷாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அவர் கூறும்போது, நான் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. படம் பார்த்த நண்பர்கள் சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்கள்.

பெரிய நாயகன் இல்லாமல், விளம்பர நோக்கோடும் இல்லாமல், நட்சத்திர அந்தஸ்த்தோடு இப்படத்தை இயக்கி இருக்கிறார் திருஞானம்.

இப்படிப்பட்ட படத்தின் புரமோஷனுக்கு நாயகி த்ரிஷா வரவில்லை என்பது வருத்ததற்குரிய விஷயம்.

பெரிய நடிகர் படங்கள் என்றால் படத்தின் ஹீரோக்களை வைத்து புரமோஷன் செய்யலாம். ஆனால் இதுபோன்ற படங்களுக்கு படத்தின் ஹீரோயின் வரவேண்டும்.

அது படத்துக்கு உதவும். அவர் வராததற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். அடுத்த வாரம் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அதற்குமுன் இந்த படத்தின் புரோமோஷனில் த்ரிஷா கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இல்லை என்றால் இந்தப் படத்துக்காக, அவர் வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதியை திரும்பப் பெறுவோம் என்பதை தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக எச்சரிக்கையாகச் சொல்லிக் கொள்கிறேன்.

இதை இப்படியே விட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்க முடியாது. இது மற்றவர்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன் என்றார்.

விழாவில் ஒளிப்பதிவாளர் ஜேடி, நடிகர் விஜய் வர்மா, நடிகை சங்கீதா, இசையமைப்பாளர் அம்ரீஷ், தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் கே.ராஜன், கே.பாக்யராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே