கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டம் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது.

அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரும், பனவிளை சர்ச் பங்குதந்தையுமான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துக்களை பேசினார். அதில், `தி.மு.க ஆட்சிக்கு வந்தது நாங்கள் போட்ட பிச்சை. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் சட்டைப்போடாமல் சுசீந்திரம் கோயிலுக்கு போகிறார்கள். நாங்கள் சர்ச்சுக்கு கோட் போட்டுக்கொண்டு, டை அணிந்துகொண்டு போவோம். என்னதான் நீங்கள் கோயிலுக்குப் போனாலும் இந்துக்கள் உங்களுக்கு ஓட்டுப்போடமாட்டார்கள்.

எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ காலில் செருப்பு போடாமல் நடக்கிறார். பாரத மாதாவை அவர் செருப்புப்போட்டு மிதிக்கமாட்டாராம். ஆனால் பாரதமாதாவின் அசிங்கம் நம் மீது பட்டு, சொறி சிரங்கு ஏற்படாமல் இருக்க நாம் ஷூ போட்டுவிட்டு நடக்கிறோம். பாரதமாதா ரொம்ப டேஞ்சர். மண்டைக்காட்டில் நடந்த மத கலவரத்திற்கு எம்.ஆர்.காந்திதான் காரணம்’ என பேசியதுடன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.

அந்த வீடியோ வைரலாக பரவியதால் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வீடியோ வெளியிட்டார். இதுகுறித்து இந்து அமைப்பினர் காவல்நிலையங்களில் புகார் அளித்தனர். அதன்பேரில் அருமனை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அருமனை வட்டார கிறிஸ்துமஸ் விழா தலைவர் ஸ்டீபன் மற்றும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஆகியோர் மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், அவதூறு பரப்புதல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவானார். அவர் பங்குதந்தையாக இருக்கும் பனவிளையில் நேற்று போலீஸார் தேடிச்சென்றனர். அவர் அங்கு இல்லை. இதையடுத்து மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் தலைமறைவாக இருந்த பாதிரியார் ஜார்ஜ், போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கன்னியாகுமரி மாவட்டம் அருமனை காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே