கோயில் சொத்து விவரத்தை இணையத்தில் பதிவிடுக – அமைச்சர் சேகர்பாபு உத்தரவு..!!

அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தரவு சேகரிக்கும் பணிகள் மற்றும் இணையப்பதிவேற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலில், அறநிலையத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.

1. கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள் மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களை இணையத்தில் வெளியிட வேண்டும்.

2. கோயில்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

3. கோயில் நிலங்கள் மற்றும் கட்டடங்களின் விவரங்களை, பொதுமக்கள் கணினிவழியில் பார்வையிடும் வகையில் புவிசார் குறியீடு செய்து இணையத்தில் வெளியிட வேண்டும்.

4. கோயில் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.

5. கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றல், நியாய வாடகை வசூலித்தல் மற்றும் கோயில் வருவாயினங்களைப் பெருக்கும் வகையில் விரைந்து செயல்பட வேண்டும்.- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே