மளிகை கடையில் தராசை உடைத்த போலீஸ் இடமாற்றம்! புதிய தராசு வாங்கி கொடுத்தார் எஸ்.பி

திருப்பத்தூர் மாவட்டத்தில் மளிகை கடையில் எலக்ட்ரானிக் தராசுவை சாலையில் வீசி போலீஸ்காரர் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வெங்கடசமுத்திரம் என்ற கிராமத்தில் ராஜா என்பவர் சிறிய மளிகை கடை நடத்தி வருகிறார். லாக்டௌன் காலத்தில் மதியம் 2 மணிக்கு மேல் மளிகை கடைகள் திறக்க தடையுள்ளது. கடந்த வியாழக்கிழமை உம்ராபாத் போலீஸ நிலையத்தின் தலைமைக் காவலர் ரகுராம் இங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். மதியம் 2 மணிக்கு மேல் கடை திறந்திருப்பதைக் கண்ட ரகுராம் கோபமடைந்து கடையிலிருந்து எலக்ட்ரானிக் தராசை தரையில வீசியடித்தார். இதில், தராசு உடைந்து போனது. ஏராளமான மக்கள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்புடைய சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வைரலாகியது.

இந்தத் தகவல் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமாரை எட்டியது. உடனடியாக, கான்ஸ்டபிள் ரகுராமை வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். அதோடு, தன் கடமை முடிந்து விட்டது என்று எஸ்.பி நினைக்கவில்லை. பாதிக்கப்பட்ட ராஜாவின் மளிகைக் கடைக்கு நேரடியாக சென்ற எஸ்.பி . விஜயகுமார், புதிய தராசு ஒன்றை வாங்கிக் கொடுத்தார். போலீஸாரின் செயலுக்கு தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ராஜாவிடத்தில் தெரிவித்தார். எஸ்.பி எடுத்த நடவடிக்கையால் மளிகைக்கடைக்காரர் ராஜா மனம் நெகிழ்ந்து போனார்.

லாக்டௌன் காலத்தில் மக்களிடத்தில் அன்புடன் நடந்து நன்மதிப்பை பெறுங்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போலீஸாரை கேட்டுக் கொண்டுள்ளார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று நடந்து கொள்ள வேண்டியது போலீஸாரின் கடமை.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே