Amphan புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் பிரதமர் மோடி பேட்டி

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியுடன் இணைந்து பிரதமர் நரேந்திர உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.

வங்கக் கடலில் உருவான அதி உச்ச உயர் தீவிரப் புயலான Amphan, மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவை ஒட்டியுள்ள சுந்தரவனக் காடுகள் இடையே கரையைக் கடந்தது.

அப்போது கொல்கத்தாவில் மணிக்கு 190 கிலோ மீட்டர் சூறைக்காற்றுடன், பலத்த மழை பெய்ததது. இதனால் சாலையோரம் இருந்த மரங்கள் வேருடன் சாய்ந்தன.

ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. சூறைக்காற்று காரணமாக கொல்கத்தாவில் ஒரு மின்மாற்றி வெடித்து தீப்பற்றி எரிந்தது.

கடும் சூறைக்காற்றால் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு நிவாரண முகாம்களுக்கு ஏராளமானோர் சென்றனர்.

தெற்கு 24 பர்கானாஸ், ஹவுரா, மேற்கு மற்றும் கிழக்கு மிட்னாபூர், சுந்தர்பன், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனால், சுமார் 5 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். Amphan புயலால் மேற்குவங்கத்தில் மட்டும் 80 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் மேற்குவங்கத்தில் புயல் பாதித்த இடங்களை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

அதன்பிறகு, மம்தா பானர்ஜி, அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் தான்கர் ஆகியோருடன் இணைந்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மோடி, ‘கொரோனா விவகாரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி சிறப்பாக செயல்பட்டுவருகிறார்.

Amphan புயல் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு மேற்கு வங்கத்துக்கு உடனடியாக நிவாரண நிதியாக 1000 கோடி ரூபாய் வழங்கப்படும்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கு இந்த கடினமான நேரத்தில் ஒட்டுமொத்த நாடும் துணைநிற்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

புயலால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், பாதிக்கப்பட்டவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

அப்போது, மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் ஜெக்தீப் தான்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே