பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் சி.பி.எஸ்.இ. பிளஸ் -2 பொது தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலையை பொறுத்து, பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக இன்று கல்வித்துறை அதிகாரிகளுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாணவர்களின் உடல்நலன், பாதுகாப்பு முக்கியம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக கூறினார். மாணவர்களின் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியம் என்பதால் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டிய சூழல் உள்ளது என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பின் கருத்துக்களையும் கேட்டபின் பிளஸ் 2 தேர்வு குறித்து இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.