கோவையிலும் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை – சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் அதிக எண்ணிக்கையில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தொற்று தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 21) நடைபெற்றது.

இதில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கோவையில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்குச் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதித்த 1,609 பேர் குணமடைந்துள்ளனர். 806 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 69 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் நோய்த்தொற்றைக் கண்டறியும் காய்ச்சல் முகாம்கள் அதிக அளவில் நடத்தப்படும்.

கோவையில் தினமும் 4,000 பேர் வரை பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். எந்தச் சூழலையும் எதிர்கொள்ள அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கோவையில் தற்போது கரோனா நோயாளிகளுக்காக 4,650 படுக்கை வசதிகள் தயாராக உள்ளன.

இஎஸ்ஐ மருத்துவமனையில் மேலும் 500 படுக்கைகளை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், கோவையிலும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டறிந்து இருப்பது நம்பிக்கை தரும் செய்தி.

விரைவில் கரோனாவுக்கு மருந்து வர வேண்டும். கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் சித்த மருத்துவத்தின் பங்களிப்பும் சிறப்பாக உள்ளது.

கரோனா பரிசோதனை முடிவுகள் வருவதில் எவ்விதத் தாமதமும் இல்லை. கரோனா வைரஸ் பரவல் மற்றும் இறப்புகளைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டாம்.

உரிய முன்னெச்சரிக்கையுடன் இருந்தால், நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறும்போது, “தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் அரசு மருத்துவமனைகளில் கரோனாவுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விமானம் மூலம் கோவை வருவோருக்கு முழுமையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே