கோவை : புற்று நோய்க்கு கதிரியக்க இயந்திரம்; விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு..!

கோவை அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க ரூ.25 கோடி செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அதிநவீன கதிரியக்க சிகிச்சை இயந்திரத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று (ஜூலை 21) பார்வையிட்டார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“மண்டலப் புற்றுநோய் மையமாக கோவை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு உடலின் மற்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படாத வகையில், புற்றுநோய் பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் துல்லியமாக கதிர்வீச்சு செலுத்தி சிகிச்சை அளிக்கப் பயன்படும் ‘லீனியர் ஆக்ஸிலரேட்டர்’ (Linear Accelerator) என்ற நவீன இயந்திரம் ரூ.25 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ளது. 

ஜூலை மாதத் தொடக்கம் முதல் இந்த இயந்திரம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 21 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று வேறு எந்த மாநிலத்திலும் அரசு மருத்துவமனைகளில் நவீன இயந்திரங்கள் இல்லை. முதன்முதலாக சென்னையில் இந்த இயந்திரம் நிறுவப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கோவையில் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தொடக்க நிலையில் புற்றுநோயைக் கண்டறிந்தால் குணப்படுத்தலாம்.

அந்தவகையில் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய் போன்றவற்றுக்கு இந்த இயந்திரம் மூலம் தொடக்க நிலையிலேயே சிகிச்சை அளிக்கலாம்.

தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சையை மேற்கொண்டால் ரூ.1.50 லட்சம் வரை செலவாகும்.

ஆனால், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கோவை அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக இந்த சிகிச்சை செய்யப்படுகிறது.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.”

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை அரசு மருத்துவமனையின் டீன் பி.காளிதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே