கேமரா வடிவில் வீடு கட்டிய புகைப்பட கலைஞர்

கர்நாடகாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் கேமராக்களின் மீது கொண்ட காதல் காரணமாக கேமரா வடிவிலான வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

பெல்காம் மாவட்டத்தில் வசிக்கும் 49 வயதான ரவி ஹோங்கல் 1986ம் ஆண்டு முதல் புகைப்படக் கலைஞராக இருந்து வருகிறார்.

தனது சிறுவயது முதலே கேமராவின் மீதும், புகைப்பட கலையின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக ரவி இருந்திருக்கிறார்.

அதனால் அவரும் அவரது மனைவியும் இணைந்து கேமரா வடிவிலேயே ஒரு கனவு இல்லத்தை கட்ட வேண்டும் என விரும்பியுள்ளனர்.

மேலும் அவர்களுடைய மகன்களுக்கும் கேனான், எப்சன் மற்றும் நிக்கான் என்னும் கேமரா கம்பெனிகளின் பெயர்களையே வைத்துள்ளனர்.

மேலும் மூன்று அடுக்குகளை கொண்ட இந்த வீடு, DSLR கேமராவுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. லென்ஸ், ஃபிளாஷ், படச்சுருள் வடிவங்கள் இந்த வீட்டின் முகப்பில் இடம்பெற்றுள்ளன.

கேமராவை போலவே வீட்டின் முன்பகுதியில் உள்ள கண்ணாடி ஜன்னல் View finder போல் அமைந்துள்ளது.

இது தன்னுடைய கனவு வீடு என கூறும் ரவி ஹோங்கல், தன்னிடம் இருந்த பணம் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் இந்த வீட்டை கட்டி முடித்ததாக கூறியுள்ளார்.

இந்த புதுமையான வீட்டிற்கு ‘க்ளிக்’ எனவும் பெயர் வைத்துள்ளார்.

க்ளிக் வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. புகைப்படக் கலைஞரின் கலை ஆர்வத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். தற்போது ரவி, மனைவி கிருபா மற்றும் மகன்கள் கேனான், எப்சன் மற்றும் நிக்கான் உடன் கேமரா வடிவிலான க்ளிக் வீட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே