தமிழகத்தில் செப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கும், மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

கொரோனா தொற்று தொடங்கிய மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பேருந்து, ரயில் என பொதுப் போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பொது போக்குவரத்திற்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் சேவைக்கும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

தமிழக அரசு, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்களின்  வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளித்துள்ளது. 

இந்த வகையில் தற்போது, தமிழ்நாட்டில், மாவட்டத்திற்குள்ளான பொது பேருந்து போக்குவரத்து, அனைத்து வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனம், வணிக வளாகங்கள், தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இந்த ஊரடங்கு உத்தரவானது ஒரு சில கட்டுப்பாடுகளுடன் 30.9.2020 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வர பொதுமக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி (Standard operating procedure), 7.9.2020 முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 

மேலும், அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி (Standard operating procedure), தற்போது 7.9.2020 முதல் மாநிலத்திற்குள் பயணியர் ரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது, வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவது, வெளியிடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிப்பது உள்ளிட்ட அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றினால், இந்த நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முடியும்.

எனவே பொதுமக்கள் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே