திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம், நல்லூர் கிராமத்தில் 336 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டடங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தமிழக அரசு, மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகளை எற்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 2017-18ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டையில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியும், 2019-20ஆம் கல்வியாண்டில் கரூரில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியானது 2019-20ஆம் கல்வியாண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

மேலும், மத்திய அரசின் நிதியுதவியுடன், கடந்த 2019-ஆம் ஆண்டில், இராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று சரித்திர சாதனையை படைத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் மாநகராட்சி மற்றும் திருப்பூர் தெற்கு வட்டத்தில் உள்ள நல்லூர் கிராமப் பகுதியில் சுமார் 11.28.0 ஹெக்டேர் நிலப்பரப்பில் 150 எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்கையுடன் புதிய திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது.

இம்மருத்துவக் கல்லூரி நிறுவிட, மத்திய அரசு 60 விழுக்காடு பங்களிப்பாக 195 கோடி ரூபாய் நிதியை வழங்கும்.

எஞ்சிய 141 கோடியே 96 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கும்.

இந்த புதிய அரசு மருத்துவக் கல்லூரி நிறுவிட 336 கோடியே 96 லட்சம் ரூபாய் அனுமதித்து நிர்வாக ஒப்புதலையும், முதல்கட்டமாக 100 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்தும் 12.11.2019 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க. சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே