தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம்..!!

தஞ்சாவூர் அருகே ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால், 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கின. இதையடுத்து, உடைப்பு ஏற்பட்ட பகுதியை அரசு அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்து, உடைப்பை அடைத்தனர்.

தஞ்சாவூரில் கடந்த சில நாட்கள் பெய்ந்து வந்த தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.

இதில், அதினாம்பட்டு கிராமத்தில் உள்ள 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாமுண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியநிலையில், கடந்த 13-ம் தேதி ஏரியின் தென்கரையில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.

இதனால், அந்தப் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் மற்றும் அண்மையில் சாகுபடி செய்யப்பட்ட கடலை, எள் போன்ற 100 ஏக்கரிலான வயல்கள் நீரில் மூழ்கி, பயிர்கள் சேதமடைந்தன. 

இதனால் அதினாம்பட்டு, வல்லுாண்டாம்பட்டு, வேங்கராயன்குடிக்காடு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

ஏரி உடைப்பு குறித்து தகவலறிந்த அக்னியாறு கோட்ட பொதுப்பணித் துறை கோட்டப் பொறியாளர் திலீபன், தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், மண்டல துணை வட்டாட்சியர் ஆர்.செந்தில், கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன், நாஞ்சிக்கோட்டை ஊராட்சித் தலைவர் கி.வ.சத்தியராஜ் ஆகியோர் விவசாயிகள் உதவியுடன் நேற்று காலை ஏரி கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைத்தனர்.

இதையடுத்து வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடியத்தொடங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே