அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க ஓவைசி எதிர்ப்பு

அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் பூமிபூஜை விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றால் அது அரசியல் சாசனத்தின்கீழ் அவர் ஏற்ற பதவிப் பிரமாணத்திற்கு எதிரானது என்று அகில இந்திய முஸ்லிம் மஜ்லீஸ் கட்சி தலைவர், அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ஆகஸ்ட் 5ம் தேதி வெகுவிமரிசையாக ராமர் கோவில் பூமி பூஜை நடைபெற உள்ளது.

இந்த நிலையில்தான், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக அசாதுதீன் ஓவைசி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுபற்றி அவர் டுவிட்டரில் கூறுகையில், அயோத்தி பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றால், அரசியல் சாசனப்படி எடுத்துக்கொண்ட பதவி பிரமாணத்திற்கு எதிரானதாகிவிடும். 

ஏனெனில், அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மதசார்பின்மை வலியுறுத்தப்பட்டுள்ளது.

அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு, வன்முறை கும்பலால், 400 ஆண்டுகால பழமை வாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதை மறக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

அப்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்று நீதிமன்றம் கூறியது. முஸ்லீம் தரப்புக்கு வேறு பகுதியில் நிலம் ஒதுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

இந்த நிலையில்தான், ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளன.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கியமான தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை பிரதமர் மோடி இந்த விழாவில் பங்கேற்க போவதாக தெரிவிக்கவில்லை என்ற போதிலும், அவர் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் உள்ளிட்ட பலருக்கும் ராம் மந்திர் அறக்கட்டளை சார்பில் பூமிபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே