காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ..!!

கேரளாவை சேர்ந்த காங்., மூத்த தலைவர் பி.சி.சாக்கோ, அக்கட்சியில் இருந்து வெளியேறியுள்ளார். மேலும், காங்கிரசில் ஜனநாயகம் இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பி.சி.சாக்கோ (வயது 74). கேரளாவைச் சேர்ந்த இவர், காங்கிரஸ் எம்.பி.,யாகவும் இருந்துள்ளார்.

கேரளாவில் ஏப்.,6ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டேன். எனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவிற்கு அனுப்பியுள்ளேன். 

கடந்த பல நாட்களாக இந்த முடிவைப் பற்றி நான் ஆலோசித்து வந்தேன்.கேரளாவில் காங்கிரஸ் என்ற ஒரு கட்சியே இல்லை. காங்கிரஸ் (ஐ) மற்றும் காங்கிரஸ் (ஏ) ஆகிய இரண்டு கட்சிகள் உள்ளன.

இந்த இரண்டு கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கேரள காங்கிரஸ் என்ற பெயரில் செயல்படுகிறது.

காங்கிரஸ் ‘ஏ’ குழுவிற்கு முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி தலைமை தாங்குகிறார்.

காங்கிரஸ் ‘ஐ’ குழுவிற்கு மாநிலத் தலைவர் ரமேஷ் சென்னிதலா தலைமை தாங்குகிறார். கேரள சட்டசபை தேர்தலில் வெற்றிப்பெற்று காங்., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

ஆனால் காங்கிரசின் உயர்மட்ட தலைவர்களால் கட்சியானது இரண்டு குழுக்களாக பிளவுபட்டுள்ளது. இதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நான் கட்சி மேலிடத்தில் வாதிட்டு வந்தேன்.

ஆனால் இரு குழுக்களும் வழங்கிய திட்டத்திற்கு மேலிடம் ஒப்புக்கொள்கிறது.

காங்கிரசில் ஜனநாயகம் இல்லை. வேட்பாளர்களின் பட்டியல் தொடர்பாக மாநில காங்கிரஸ் குழுவுடன் விவாதிக்கப்படவில்லை. தேர்தல், வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு குறித்து விவாதிப்பதற்கு குழுக்கள் இல்லை.

கேரளாவில் உண்மையான காங்கிரஸ்காரனாக இருப்பது என்பது மிகவும் கடினம். காங்கிரசின் தலைமை துடிப்புடன் செயல்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே