உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு…!

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ளதால், தொகுதி பங்கீடுகள் பிரிப்பதில் தமிழக அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

அதன்படி 9 மாவட்டங்கள் தவிர, மற்ற 27 மாவட்டங்களுக்கு திட்டமிட்ட தேதியில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, வரும் 17ம் தேதி நடைபெறும் எனவும், மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அதிமுக, இரண்டு கட்டங்களாக வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டது.

அதில் கோவை, திருப்பூர், ஈரோடு, தருமபுரி, கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை அறிவித்துள்ளது.

இதேபோல் திமுகவும், தான் போட்டியிடவுள்ள மாவட்டங்களின் விவரங்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து 34 மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.

பிறமாவட்டங்களில், திமுக தலைமையில் போட்டியிடும் தோழமை கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வேட்பு மனுத்தாக்கல் செய்யவதற்கான கால அவகாசம், இன்று மாலையுடன் நிறைவடைய உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே