நிர்பயா வழக்கு : குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தனித்தனியே தூக்கிலட உத்தரவிட முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற இளம்பெண் கூட்டுபாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் நால்வருக்கு தூக்கு தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி தூக்கு தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் குற்றவாளிகள் சார்பில் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பட்டது.

இந்த கருணை நிராகரிக்கப்பட்டதால் பிப்ரவரி மாதம் 1ம் தேதி தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் குடியரசு தலைவருக்கு அனுப்பட்ட கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இதனால் தூக்கு தண்டனையை ஒத்திவைக்க வலியுறுத்தி ஜனவரி 31ம் தேதி மாலை டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் குற்றவாளிகள் நான்கு பேரையும் தனித்தனியாக தூக்கிலிட கோரி, டெல்லி அரசும் மத்திய அரசும் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுக்கள் மீது இன்று தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதின்ற நீதிபதி சுரேஷ் குமார் கெயிட் அடுத்த 7 நாட்களுக்குள் சட்டரீதியாக உள்ள அனைத்து நிவாரணங்களையும் குற்றவாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளார்.

7 நாட்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால் அதிகாரிகள் சட்டரீதியாக தமது கடமையைச் செய்யலாம் என்று அவர் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி விசாரணை நீதிமன்றத்தின் தடையை நீக்க மறுத்து விட்ட அவர், முகேஷ் சிங், வினய் சர்மா ஆகியோர் அனைத்து சட்ட நிவாரணங்களையும் பயன்படுத்திவிட்டதால், அவர்கள் இருவரையும் மட்டுமாவது முதலில் தூக்கில் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார்.

அரசியலமைப்புச் சட்ட பிரிவு 21-ன் படி இறுதி மூச்சு நிற்கும் வரை தம்மை காப்பாற்றிக் கொள்ளும் உரிமை இந்த குற்றவாளிகளுக்கு இருப்பதாகவும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ஒரே வழக்கு, ஒரே தீர்ப்பு, ஒரே தண்டனை என்பதால் குற்றவாளிகளுக்கு தனித்தனியாக தண்டனை வழங்கக்கூடாது என்று தீர்ப்பு வழங்கினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே