தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு?? முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை..!!

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக இருந்து வருகிறது. இந்திய அளவில் இதுவரை கொரோனா பரவலில் 5-ம் இடத்தில் இருந்து வந்தது தமிழகம்.

தற்போது 4-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு என்பது 9 ஆயிரத்தை தாண்டியதாக உள்ளது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,80,728. மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 13,071. தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 65,635 ஆக உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் சில புதிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஆனாலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. இதனால் புதிய கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் இன்று சேலத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புகிறார்.

சென்னையில் இன்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனையின் முடிவில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தும் அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிடக் கூடும் என தெரிகிறது.

மேலும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் இனிவரும் நாட்களுக்கு அமலுக்கு வரவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றன தலைமை செயலக வட்டாரங்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே