அடுத்து ‘வாடிவாசல்’ அல்லது தனுஷ் படம்: வெற்றிமாறனின் திட்டம் என்ன?

சூரி படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறனின் அடுத்த படத் திட்டம் குறித்து தெரியவந்துள்ளது.

‘அசுரன்’ படத்தைத் தொடர்ந்து, சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இளையராஜா இசையமைத்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்துக்குப் பிறகு வெற்றிமாறனின் அடுத்த படம் என்ன என்பது குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அடுத்தது ‘வாடிவாசல்’ படம்தான் என்று ஒரு தரப்பும், தனுஷ் படம்தான் என ஒரு தரப்பும் தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக வெற்றிமாறன் தரப்பில் விசாரித்தபோது, “சூரி படத்தின் படப்பிடிப்பு இதுவரை 60% முடிந்துள்ளது. மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு அடுத்த படம் என்ன என்பது குறித்து வெற்றிமாறன் இன்னும் எதுவுமே திட்டமிடவில்லை.

முன்னதாக, சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்துக்காக டெஸ்ட் ஷூட் ஒன்றை வெற்றிமாறன் முடித்து வைத்துள்ளார். இந்தப் படம் உடனடியாகத் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். ஏனென்றால் ‘வாடிவாசல்’ கதைக்களத்துக்கு நிறைய முன் தயாரிப்புகள் தேவைப்படுகின்றன. அதேபோல், படப்பிடிப்புக்கும் நீண்ட நாட்கள் தேவை.

ஆகையால், சூரி படத்தை முடித்துவிட்டு தனுஷ் படத்தைத் தொடங்குவதற்குதான் வாய்ப்புகள் அதிகம். எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தை முடித்துவிட்டுதான் ‘வாடிவாசல்’ படத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் வெற்றிமாறன். இப்போதைக்கு சூரி படத்தை முடிக்க வேண்டும். அதற்குப் பின்னர் சூழல் எப்படி வேண்டுமானாலும் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன” என்று தெரிவித்தார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே