அடுத்த கட்ட நடவடிக்கை: கட்டுப்பாடின்றி பரவும் கரோனா; மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் பலமுறை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

எனினும் மக்களின் வாழ்வாதாரம், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதன்பின் கடந்த செப்டம்பரில் வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டது. அப்போது நாளொன்றுக்கு 90,000 முதல் ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் கடந்த பிப்ரவரிமுதல் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

நாட்டின் சில மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதில் வைரஸ் பரவலை கட்டுப் படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் சிங் பாகல், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை.

கரோனா பரவலை தடுக்க எடுக்கபப்ட வேண்டிய நடவடிக்கைள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கரோனா தடுப்பூசி செலுத்துவதை விரிவுபடுத்துவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசிபோடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 16-ம் தேதி நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல்கட்டமாக சுகாதார ஊழியர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்குஉட்பட்ட நாள்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடுவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது., இப்பணி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இணை நோய் உள்ளவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே