ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே காந்தி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் நவமணி(25).
இவர் சனிக்கிழமை அலங்காநல்லூரில் முதல்வர் தொடங்கிவைத்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டார்.
அப்போது சீறி வந்த காளையை நவமணி அடக்க முயன்றார்.
இதில், காளை அவரது கழுத்தில் குத்தியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு வாடிவாசல் அருகே இருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி அளித்தனர்.
பின்னர் நவமணியை அரசு ராஜாஜி மருத்துவமனை, அவசர தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த நவமணி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார்.
இதுகுறித்து அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.