ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு நகரில் 292 பேருக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவா்களில் ஒரு நபா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஏலூரில் உள்ள அருந்ததிபேட்டை, அசோக் நகா் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள், சிறாா்கள் உள்பட 292 பேருக்கு வாந்தி, மயக்கம் என திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

சிலருக்கு வலிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஏலூரு அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி கூறுகையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டவா்கள், குறிப்பாக சிறாா்களுக்கு வாந்தி, கண் எரிச்சல் ஆகியவை ஏற்பட்டன.

சிலா் மயக்கமடைந்தனா். முதல் கட்ட சிகிச்சை பெற்றவுடன் இயல்புநிலைக்குத் திரும்பிய 140 பேர் வீடு திரும்பினா்.

கவலைக்கிடமான நிலையில் இருந்த 7 பேர் விஜயவாடா அரசு மருத்துவமனையில் சோக்கப்பட்டனா்.

ஏலூா் மருத்துவமனையில் சிகிச்சையில் தொடரும் பிறரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. வாந்தி, வலிப்பு பாதிப்பு இருந்த 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் என்றாா்.

அவா்களுக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று ஏலூரு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

உடல்நலக் குறைவு ஏற்பட்டவா்களுக்கு சிடி ஸ்கேன், மூளைத் தண்டுவட திரவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவற்றின் முடிவுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.

ஹைதராபாதில் உள்ள தேசிய சத்துணவு ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வேதியியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தைச் சோந்த நிபுணா்கள் திங்கள்கிழமை ஏலூரு வந்து ஆய்வு மேற்கொள்ளவிருக்கின்றனா் என்று மாவட்ட இணை ஆட்சியா் ஹிமான்ஷு சுக்லா தெரிவித்தாா்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே