அரசு சலுகைகளை பெறுவதற்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் – தமிழிசை செளந்தரராஜன்

தீபாவளி பண்டிகைக்கு புதுச்சேரி அரசு அறிவிக்கும் சலுகைகளை பொதுமக்கள் பெற கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானை எதிர்த்து போராடி இந்திய ராணுவம் வெற்றி பெற்றதன் 50ம் ஆண்டு விழா மற்றும் 75வது குடியரசு தின விழாவை கொண்டாடும் வகையிலும், கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதை ஊக்கப்படுத்தவும், இந்திய விமான படை வீரர்கள் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிள் பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நூறு சதவீத தடுப்பூசி போட திட்டமிட்டோம். அது இயலவில்லை. அக்டோபர் 2ம் தேதிக்குள் இந்த இலக்கை எட்ட திட்டமிட்டுள்ளோம். புதுவையில் அனைத்து தொகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி போடுவதை முழுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் ஒரு மருத்துவ குழுவை கொடுத்து தடுப்பூசியை ஊக்கப்படுத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் இல்லாவிட்டால் அரசின் நல திட்டங்களை பொதுமக்கள் பெறுவதில் பாதிப்பு ஏற்படும். தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு அரசு அறிவிக்கும் சலுகைகளை பெற கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று எச்சரித்த தமிழிசை, அரசு ஊழியர்கள் ஊதியம் பெறுவதற்கும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். புதுச்சேரியில் இன்னும் 35 சதவீதம் பேர் தடுப்பூசி போடவில்லை. அதனால் தடுப்பூசி போடாமல் விடுபட்டோர் வீடு வீடாகக் கணக்கெடுக்கப்பட உள்ளனர் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே