#FactCheck : இராமநாதபுரத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையின் உண்மை நிலவரம்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை திட்டமிட்டே மாவட்ட நிர்வாகம் குறைத்து காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 22 நோயாளிகள் உயிரிழந்ததாக வெளியான தகவல் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை சுமார் 2,584 பேர் கொரானா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 299 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி உள்ளவை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் 27 குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலர்கள், போலீசார், சுகாதாரத்துறை ஊழியர்கள், மருத்துவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தில் பணிபுரியும் செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் 72 காவலர்களுக்கு பரிசோதனை நடத்தியதில் ஒரு பெண் காவல் ஆய்வாளர், இரண்டு சார் ஆய்வாளர்கள், 3 சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் உட்பட 37 காவலர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாயல்குடி காவல் நிலையத்தின் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் கொரோனா தொற்றுக்கு கடந்த செவ்வாய்கிழமை இரவு உயிரிழந்தார்.

மேலும், இந்திய கடற்படை, கடலோர காவல் படை உயர் அதிகாரிகள், இந்திய-இலங்கை கடல் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் வீரர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு கடற்படை மற்றும் கடலோர காவல்படை முகாம்களில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்களப் பணியாளர்கள், காவலர்கள் என பலருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதுடன் உயிரிழப்பின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு சுகாதாரத் துறை தினமும் மாலை வெளியிடும் அறிக்கையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருவர் அல்லது இருவர் இறந்ததாக குறிப்பிடுகிறது. ஆனால், தினமும் 8- 10 கொரோனா நோயாளிகள் இறப்பதை அவர்களின் உறவினர்களை விசாரித்து அறிய முடிகிறது.

இறப்பு எண்ணிகையை மாவட்ட நிர்வாகம் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை குறைத்து காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

செவ்வாய்கிழமை சுகாதராத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்டம் முழுவதும் இதுவரை மொத்தம் 151 நோயாளிகள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் இறந்த ஒருவரின் உறவினர் கருணாமூர்த்தி பிபிசி தமிழிடம் பேசும்போது,

“கொரோனா தொற்றியோர் உயிரிழந்தால் உரிய வழிகாட்டுதலின்படி உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் ஆனால் அதற்கு மாறாக சாதாரணமாக இறுதிச் சடங்குகள் செய்யப்படுகின்றன. இது குறித்து சுகாதாரத்துறையினரிடம் கேட்கும் போது இறந்தவர்கள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவிட்டதாகவும், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பின் விளைவுகளால் இறந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

சுகாதாரத்துறையினர் கொடுக்கும் இந்த விளக்கத்தை மக்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. காரணம், தொற்று காரணமாக அழைத்து சென்று இரண்டு மூன்று நாட்களில் எப்படி தொற்றில் இருந்து நோயாளிகள் மீள முடியும்? என்பதே மக்களின் சந்தேகமாக இருக்கிறது.

கடந்த 7 நாட்களில் எனது நண்பர்கள், உறவினர்கள் என 15 நோயாளிகள் இறந்துள்ளனர். தகனம் செய்யும் இடங்களில் தொடர்ச்சியாக உடல்கள் வந்த வண்ணமாக உள்ளன” என்கிறார் கருணாமூர்த்தி.

இது குறித்து ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் இடுகாட்டில் பணியாற்றி வரும் செல்வியிடம் பேசியது பிபிசி தமிழ், கடந்த ஒரு வாரமாக அல்லிகண்மாய் இடுகாட்டிற்கு ராமநாதபுரம் செட்டியார் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சக்கரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகமான உடல்கள் தகனம் செய்ய வருகின்றன.

நான் இங்கு கடந்த 11 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். ஒரு நாளைக்கு இவ்வளவு உடல்கள் தகன மேடைக்கு வந்ததில்லை. இங்கு வரும் உடல்கள் அனைத்தும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் என உறுதியாக கூற முடியாது.

எனினும், கொரோனா தொற்றால் உயிரிழந்த உடல்கள், இயற்கை மரணத்ததால் உயிரிழந்த உடல்கள் என குறிப்பிடாமல் தகனம் செய்ய வருகின்றன. முன்பு சுகாதாரத்துறையில் இருந்து கொரோனா தொற்றால் உயிரிழந்த உடல்கள் என குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டன. ஆனால் தற்போது அப்படி எந்த அறிவிப்பும் வருவதில்லை.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மயானங்களில் உடல்கள் குவிந்து வருவதாக செய்திகள் வருவதால், நாங்கள் அதனை தடுப்பதற்காக 1 முதல் 30 வரை டோக்கன் வழங்கி வருகிறோம்.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் எங்களிடம் வந்து டோக்கன் பெற்று செல்கின்றனர். அந்த டோக்கனில் உடல்கள் எத்தனை மணிக்கு இடுகாட்டிற்கு எடுத்து வர வேண்டும் என குறிப்பிடபட்டிருக்கும் அதன் அடிப்படையில் உடல்கள் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக வருவதால் அவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வருதாக கூறினார் செல்வி.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கைகள் திட்டமிட்டே குறைத்து காட்டப்படுவதாக எழுந்த குற்றசாட்டுகள் குறித்து உரிய விளக்கம் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற்கொடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு பதிலாக பணி செய்யும் அதிகாரிகளிடம் கேட்டபோது மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் வந்தவுடன் கேட்கும்படி தெரிவிக்கின்றனர்.

பிபிசி தமிழ் தொடர்ந்து முயற்சி செய்து ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அல்லியிடம் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து கேட்ட போது, “தினமும் ராமநாதபுரத்தில் உயிரிழப்பவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்கள் என கணக்கிட முடியாது. பலரும் நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வராமல் வீடுகளில் தங்கியுள்ளனர். இன்னும் சிலர் நோய் அறிகுறியுடன் சாலைகளில் சுற்றித் திரிகின்றனர்.

கொரோனா சிகிச்சை மையத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். அப்படி உயிரிழப்பவர்களின் எண்ணிகையை முறையாக தமிழ்நாடு சுகாதாரத்துறைக்கு அனுப்பி வருகிறோம். அதன் அடிப்படையில் செவ்வாய்கிழமை வரை கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 151 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கையை குறைத்து சொல்வதால் எங்களுக்கு என்ன பயன்?

ராமநாதபுரம் மாவட்டத்தில் நோய் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவது உண்மையே. காரணம் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் மொத்தம் 400 உள்ளன. அதில் கடந்த வாரம் 170 முதல் 190 வரை மட்டும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் கடந்த மூன்று நாட்களாக 299 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தேவைக்கேற்ப ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும்.

கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை உயர்ந்தாலும் எங்களிடம் போதிய ஆக்சிஜன், மருந்துகள் கையிருப்பில் உள்ளன” என்று அவர் கூறினார்.

மேலும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் நோய் அறிகுறியுடன் உள்ளவர்கள் சிகிச்சைக்கு பயந்து வீடுகளில் தங்கி விடாமல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வர வேண்டும் என ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லாரி முதல்வர் அல்லி தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதீப்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 22 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்ததாக பத்திரிகை, ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேரடியாக ஆய்வு செய்தேன்.

கடந்த இரண்டு தினங்களில் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 19 பேர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். அதில் 6 பேருக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் 30 நோயாளிகள் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல் ஏர்வாடி தர்ஹாவில் இருந்த 11 மன நோயாளிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது” என்றார் பிரதீப்குமார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே