மார்க் ஜூக்கர்பெர்க்குடன் கலந்துரையாடிய முகேஷ் அம்பானி..!!

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்குடன் கலந்துரையாடிய ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, தனது தந்தை 1960-களில் ஆயிரம் ரூபாயுடன் நம்பிக்கை மற்றும் திறமையை முதலீடாக கொண்டு தொழில் தொடங்கியவர் என குறிப்பிட்டார்.

‘ப்யூல் ஃபார் இந்தியா 2020’ என்ற 2 நாள் கருத்தரங்கை பேஸ்புக் நடத்துகிறது. இந்தியாவில் டிஜிட்டல் தளத்தில் இருக்கும் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து இந்நிகழ்வில் விவாதிக்க உள்ளனர்.

இன்று தொடங்கிய நிகழ்ச்சியில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி இருவரும் காணொளி மூலம் பங்கேற்று நீண்ட நேரம் உரையாடினர்.

கடந்த ஏப்ரல் மாதம் பேஸ்புக் நிறுவனம் ஜியோவில் ரூ.43,574 கோடி முதலீடு செய்துள்ளது. அதன் பிறகு வாட்ஸ்அப் மூலம் பணம் செலுத்தும் சேவையை பேஸ்புக் தொடங்கியது.

இந்தியாவில் ஜியோ – வாட்ஸ்அப் கூட்டணி ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி பிரதானமாக இருவரும் விவாதித்தனர்.

முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி அஞ்சலட்டை விலைக்கு தொலைப்பேசி அழைப்புகள் இருக்க வேண்டும் என விரும்பியது பற்றி குறிப்பிட்ட மார்க், அவரிடமிருந்து கற்றுக்கொண்டது என்ன என்று கேள்வி எழுப்பினார்.

அது குறித்து முகேஷ் அம்பானி கூறியதாவது: 2000-ம் ஆண்டில், முடிந்தால் அஞ்சலட்டை விலையில் தொலைபேசி அழைப்புகளை கொடுங்கள் என ஊக்கப்படுத்தினார்.

2020-ல் ஜியோ மூலம் இலவச அழைப்புகளை கொடுப்பதில் பெருமைக்கொள்கிறோம். எங்கள் நெட்வொர்க்கில் இருக்கும் 40 கோடி மக்கள் உள்ளனர்.

அது அவருக்கு நாங்கள் செலுத்தும் பெருமை. என் தந்தை ஒரு பள்ளி ஆசிரியரின் மகன்.

1960-ல் வெறும் ஆயிரம் ரூபாயுடன் மும்பைக்கு வந்த அவர், எதிர்கால தொழில்களில் முதலீடு செய்வோம் என்ற நம்பிக்கையுடன் ரிலையன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார்.

நான் கற்ற 3 கொள்கைகள்!இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு ரிலையன்ஸை கட்டியெழுப்பியதில் நான் கற்றவற்றை மீண்டும் சொல்கிறேன்.

அவை மூன்று அடிப்படை கொள்கைகள். முதலில், தொழில்முனைவோருக்கு, தைரியமும் தன்னம்பிக்கையும் இருப்பது முக்கியம்.

தொழில்முனைவோராக முதல் முயற்சியில் நாங்கள் வெற்றிபெறவில்லை. தோல்வியடையும் போது தன்னம்பிக்கை வரும். வெற்றிபெறும்போது தன்னம்பிக்கை உறுதியடையும்.

இரண்டாவது, எது செய்தாலும் அடுத்தவரின் உணர்வறிதல் மற்றும் படைப்பாற்றல் முக்கியம்.

ரிலையன்ஸ் நிறுவனத்தில், நாங்கள் இப்போது பல மட்டங்களில் இதைச் செய்கிறோம். எங்கள் ஊழியர்கள், எங்கள் முதலீட்டாளர்கள், சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் தேசிய நலன்களை நாங்கள் கவனித்தில் கொள்கிறோம்.

என் தந்தையிடம் கற்றுக்கொண்ட இறுதியான ஒன்று, உறவு, நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் முக்கியத்துவம். ரிலையன்ஸில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களும் ஒரு பெரிய குடும்பம்.

இந்த பெரிய ரிலையன்ஸ் குடும்பத்திற்கு நாங்கள் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருக்கிறோம். திடமான நம்பிக்கை, ஆர்வம், நோக்கம் ஆகியவற்றிற்காக பிணைக்கப்பட்டுள்ளோம். இவ்வாறு பேசினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே