தன் மகன் தவித்து விடக்கூடாது என்றெண்ணி, ஊரடங்கால் ஊர் திரும்ப முடியாமல் தவித்த மகனை, தன் இருசக்கர வாகனமான ஸ்கூட்டியில் 1,400 கி.மீ பயணித்து மீட்டு வந்திருக்கிறார் ஒரு பாசத்தாய்.

கடவுள் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதால் தான் தாயை படைத்தார் என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில், போதான் நகரைச் சேர்ந்தவர் 48 வயதான ரெஜியா பேகம்.

இவர் அங்குள்ள பள்ளியின் தலைமையாசிரியையாக பணியாற்றுகிறார்.

தான் 25 வருடங்களாக ஸ்கூட்டர் ஓட்டுவதாகவும், 15 வருடங்களுக்கு முன்னர் சிறுநீரகம் செயலிழந்த தன் கணவரை, டயாலிசிஸ் சிகிச்சைக்காக தினமும் அவரை ஸ்கூட்டரில் ஹைதராபாத் நகருக்கு அழைத்து சென்று வந்ததை நினைவு கூர்கிறார்.

அப்போதே தன் கணவரை இழந்தவர், தன் கடின உழைப்பால் தன் இரு மகன்களையும் படிக்கவைத்து நல்ல நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார் ரஜியா பேகம்.

இவரது இரண்டாவது மகன் நிஜாமுதீன் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்குத் தயாராகிவருகிறார்.

நிஜாமுதினில் நண்பரின் தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரும், அவரது நண்பரும் கடந்த மாதம் 12 -ம் தேதி அண்டை மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில் நெல்லூர் அருகே உள்ள ரஹ்மதாபாத் என்னும் ஊருக்கு சென்றிருக்கிறார்கள்.

மீண்டும் 23ம் தேதி ஊர் திரும்பலாம் என்று ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நேரத்தில், நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நிஜாமுதீன் நெல்லூரிலேயே தங்கும் சூழல் உருவானது.

நிஜாமுதீன் சொந்த ஊர் திரும்புவதற்காக எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால், தனது மூத்த மகனை அனுப்பி இளைய மகனை அழைத்து வருவதென என முடிவெடுத்த ரெஜியா பேகம், ஊரடங்கை மீறுபவர்கள் மீது காவல்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு பயந்து, தன் மகனை தானே அழைத்து வரும் முடிவை எடுத்தார்.

பேருந்து, வாடகை கார்கள் என எதுவும் இல்லாததால், போதான் நகர காவல்துறை உதவி ஆணையரிடம் தனது மகனின் நிலையை எடுத்துச்சொல்லி அனுமதிக் கடிதம் பெற்று, கடந்த திங்கள்கிழமை காலையில் பயணத்தைத் தனது ஸ்கூட்டரில் தொடங்கியிருக்கிறார்.

பகல் – இரவு என தொடர்ச்சியாக ஸ்கூட்டரில் பயணித்து, உணவகங்கள் திறந்திருக்காது என்பதனால் வீட்டிலிருந்தே சமைத்து எடுத்து வந்த உணவு உண்டு, பெட்ரோல் நிலையங்களில் இளைப்பாறி, மறுநாள் அதிகாலை நெல்லூரை அடைந்திருக்கிறார்.

சுமார் 1,400 கிலோ மீட்டர், 3 நாட்கள் பயணித்து, மகனையும் மீட்டு புதன்கிழமை மாலை வீடு வந்து சேர்ந்துள்ளார் ரெஜியா பேகம்.

அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், தன் மகனை எப்படியாவது அழைத்து வந்துவிட வேண்டும் என்ற மன உறுதியுடன் பயணித்த ரெஜியா பேகத்தின் முயற்சி தன்னை நெகிழ வைத்ததாக கூறுகிறார் போதான் நகர காவல்துறை உதவி ஆணையர் ஜெய்பால் ரெட்டி.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே