இந்தியாவில் 23 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் வீணாகின்றன – காரணம் என்ன?

அதிகாரிகளின் கூற்றுப்படி தற்போதுவரை, கோவிட் தடுப்பூசிகளில் சுமார் 6.5% வீணாகிவிட்டதாக கூறப்படுகிறது.

மத்திய அரசால் இதுவரை 7 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3.46 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகாரிகளின் கூற்றுப்படி தற்போதுவரை, கோவிட் தடுப்பூசிகளில் சுமார் 6.5% வீணாகிவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது சுமார் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளது. இந்த நிலையில், தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதை அறிந்தபிறகு, அவற்றை சரியான முறையில் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்கவும், வீணடிக்கப்படுவதை கணிசமாகக் குறைக்கவும் மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.

தடுப்பூசி டோஸ்கள் வீணாவதற்கான காரணம் என்ன?

ஒவ்வொரு கோவிஷீல்ட் குப்பியிலும் மொத்தம் 10 டோஸ்கள் உள்ளன. அதே நேரத்தில் ஒரு கோவாக்சின் குப்பியில் 20 டோஸ்கள் உள்ளன. இருப்பினும் ஒரு நபருக்கு வழங்கப்பட வேண்டிய டோஸின் அளவு 0.5 மில்லி ஆகும். எனவே தடுப்பூசிபோடுவதற்காக ஒரு குப்பி திறக்கப்பட்டவுடன், அதில் உள்ள அனைத்து டோஸ்களும் நான்கு மணி நேரத்திற்குள் நிர்வகிக்கப்பட வேண்டும். இல்லையெனில், அது வீணாகிவிடும். இதனால் மீதமுள்ள டோஸ்களை பயன்படுத்த முடியாமல் அவை குப்பையில் சேர்கின்றன. இந்தியாவில் தடுப்பூசி வீணடிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் குறைந்த பயனாளிகள் தடுப்பூசி பெற வருவது தான் என்று கூறப்படுகிறது.

தடுப்பூசி குப்பிகள் திறக்கப்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் பயன்படுத்தப்பட வேண்டியிருப்பதால், தடுப்பூசி விநியோகிப்பவர்கள் பயனாளிகளின் வருகையை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம். இது தொடர்பாக டெல்லியில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் ஒரே அரசு மருத்துவமனையான எல்.என்.ஜே.பி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார் கூறியதாவது, “உதாரணமாக, மாலை 6:00 மணியளவில் நாங்கள் ஒரு குப்பியைத் திறக்கும்பட்சத்தில், தடுப்பூசி பெறுபவர்களின் குறைந்த எண்ணிக்கை காரணமாக மீதமுள்ள டோஸ்கள் வீணடிக்கப்படுகின்றன. சிங்கிள்-டோஸ் குப்பிகளுக்கான செலவு குறைந்தவை அல்ல. மேலும் அவை பேக்கேஜிங் மற்றும் போக்குவரத்து சிக்கல்களைக் கொண்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் வெகுஜனங்களுக்காக தயாரிக்கப்படுகின்றன. எனவே, தடுப்பூசி போடுவதற்கு அதிகமான மக்கள் வர வேண்டும், ”என்று குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி வீணாவதை எவ்வாறு தடுக்கலாம்?

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உலகின் இரண்டாவது பெரிய தடுப்பூசி திட்டமாக மாறியுள்ளது. இருப்பினும், தடுப்பூசிகள் வழங்கப்படுவதை மேலும் வேகப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக பொது சுகாதார நிபுணர் திலீப் மவலங்கர் நியூஸ் 18 இடம் கூறியதாவது, “தடுப்பூசி மையங்களுக்கு 1 கி.மீ சுற்றளவில் உள்ளவர்களின் காப்புப் பிரதி தரவுகள் வழங்கப்பட வேண்டும். எனவே விநோயோகிப்பாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மக்களை அழைக்கலாம். இந்த காப்புப் பட்டியல் முக்கியமானது. எனவே ஒரு குப்பியைத் திறந்தவுடன் தடுப்பூசிகள் வீணாகாது” என்று கூறினார்.

மேலும் “நாடு முழுவதும் தடுப்பூசிகளை விநியோகிப்பது ஒரு உத்தியாக இருந்தாலும், இந்த நேரத்தில் பாதிப்புகள் அதிகரித்து வரும் மாவட்டங்களில் டோஸ்களின் விநியோகத்தை அதிகரிப்பதே ஒரு சிறந்த உத்தியாகும். இந்தியாவில் சுமார் ஐம்பது மாவட்டங்களில் 60%-திற்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் உள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கொடுப்பது வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவும்” என்றும் கூறியுள்ளார். தடுப்பூசி அளவை வீணாக்குவது தொடர்பான பிரச்சினை,தடுப்பூசிக்கான தகுதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் தீர்க்கப்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாநில வாரியாக வீணாகும் டோஸ்களின் விவரம்:

தேசிய அளவில் வீணாகும் டோஸ்களின் சராசரி 6.5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது பல மாநிலங்களில் அதிக அளவு வீணாவது பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் அதன் அளவுகளில் 17.5 சதவீதத்தையும், ஆந்திரா 11.6 சதவீதத்தையும், உத்தரபிரதேசம் 9.4 சதவீதத்தையும் வீணடித்து வருகின்றன. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர்களுடனான விர்ச்சுவல் சந்திப்பின் போது தடுப்பூசி வீணடிக்கப்படுவது குறித்து பேசியுள்ளார். ஒரு ஷாட் கூட வீணாகாமல் பார்த்துக் கொள்ளுமாறு அவர் மாநிலங்களைக் கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் கூறியதாவது, தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 10% க்கும் அதிகமான தடுப்பூசி விரயம் பதிவாகியுள்ளது. மற்றொரு நபரின் உரிமையான ஒரு டோஸை வீணாக்க நமக்கு உரிமை இல்லை. எனவே, பூஜ்ஜிய தடுப்பூசி வீணாதல் இலக்குகளை வைத்துக் கொள்ளுமாறு மாநிலங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் எவ்வளவு அதிகமாக சேமிக்கிறோமோ, அந்த அளவுக்கு தகுதியுள்ளவர்கள் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெறுவார்கள்” என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே