மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் மில்கா சிங்..!!

தடகள முன்னாள் வீரர் மில்கா சிங் கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

91 வயது மில்கா சிங், ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான்கு முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 400 மீ. ஓட்டத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்ற ஒரே வீரர். 1960 ரோம் ஒலிம்பிக்ஸ் போட்டியில் 400 மீ. ஓட்டத்தில் 4-ம் இடம் பிடித்து பதக்கத்தைத் தவறவிட்டார். 400 மீ. ஓட்டத்தில் குறைந்த நேரத்தில் ஓடி முடிந்த அவருடைய தேசிய சாதனை 38 வருடங்களுக்குப் பிறகே முறியடிக்கப்பட்டது. 1959-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இரு வாரங்களுக்கு முன்பு மில்கா சிங், கரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். கரோனா பாதிப்பு குறையாததால் மொஹலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சமீபத்தில், குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, சீரான நிலைமையில் இருந்த மில்கா சிங், வீட்டுக்கு அனுப்பப்பட்டார். ஆக்சிஜன் உதவியுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஆக்சிஜன் அளவுகள் குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மில்கா சிங்கின் மனைவி நிர்மல், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே