கொரோனா பரிசோதனைகளை அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் கட்டணம் இல்லாமல் மேற்கொள்ள மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்கும் பொருட்டு தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு குறிப்பிட்ட மருந்து பொருள்கள் ஏற்றுமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் இருப்பதால் மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல்கள் நிலவிவந்தன.
இதனை தடுக்கும் பொருட்டு உள்ளூர் உற்பத்தியாளர்களை அதிக அளவில் உற்பத்திகளை மேற்கொள்ள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
வென்டிலேட்டர் போன்ற கருவிகளைத் தயாரிப்பதற்கும் ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சாதாரண காய்ச்சல், சளி இருப்பவர்கள்கூட தங்களுக்கு கொரோனா தாக்கம் இருக்குமோ என்ற அச்சத்தால் அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் விரைந்தனர்.
கொரோனா ஆய்வுகளுக்கு முதலில் தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வந்தன.
கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் கடந்த மாதம் ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
அதில் ஆய்வகங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் தேசிய வாரியத்திடம் ரியல் டைம் பி.சி.ஆர் சோதனை நடந்த அனுமதி பெற்ற அனைத்து தனியார் ஆய்வகங்களும் பரிசோதனை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வுக் கட்டணமாக அதிகபட்சமாக ரூ.4,500 மட்டுமே வசூலிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.
மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் சஷாங்க் தியோ சுதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் ரவீந்திர பட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
கொரோனா பரிசோதனைக்காகத் தனியார் ஆய்வகங்கள் அதிக கட்டணங்களை வசூலிக்க அனுமதிக்க கூடாது.
4,500 ரூபாய் செலுத்த முடியாததால் பரிசோதனை மேற்கொள்ள முடியாத சூழல் யாருக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், தேசம் நெருக்கடியான நேரத்தில் இருக்கிறது.
நோய்த் தொற்றின் அளவை கட்டுப்படுத்துவதில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
கொரோனா பரிசோதனையை தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் கட்டணமின்றி செய்ய வேண்டும்.
இலவச பரிசோதனை தொடர்பான அரசாணையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.