மதுரை யாசகருக்கு சமூக சேவைக்கான விருது – மாவட்ட ஆட்சியர் வினய் வழங்கி கௌரவம்

மதுரையில், பிச்சைக்காரர் ஒருவர், எட்டு முறை, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு, 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிய நிலையில், அவருக்கு சுதந்திரதின விருது அறிவிக்கப்பட்டது.

ஆக.,15ல் விருது வழங்க அவரை தேடிய போது கிடைக்காத அவர், இன்று 9வது முறையாக நிதி வழங்க கலெக்டர் அலுவலகம் வந்தார்.

அவருக்கு அறிவித்த விருதை கலெக்டர் வழங்கி கவுரவப்படுத்தினார்.

துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்தவர் பூல் பாண்டியன், 65; திருமணம் முடிந்த சில ஆண்டுகளில், வேலை தேடி மும்பை சென்றார்.

வேலை கிடைக்காததால், பிச்சை எடுக்க துவங்கினார்.

ஊர் திரும்பிய அவரை, குடும்பத்தினர் ஒதுக்கினர்.

இதனால், தொடர்ந்து பிச்சை எடுத்தார். செலவு போக மீத பணத்தை, கல்வி நிறுவனங்களுக்கு சேர், டேபிள் வாங்க வழங்கியுள்ளார்.

தற்போது, மதுரையில் தங்கியிருக்கும் இவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, ஏற்கனவே, 8 முறை தலா, 10 ஆயிரம் ரூபாயை, கலெக்டர் வினய்யிடம் வழங்கியுள்ளார்.

இவரை கவுரவிக்கும் வகையில், சுதந்திர தின விழாவில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மதுரை முழுவதும் அவரை அதிகாரிகள் தேடிய போதும், கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால், சுதந்திர தின விழாவில் அவருக்கு விருது வழங்கப்படவில்லை.

இந்நிலையில், தனக்கு விருது வழங்க தேடியது கூட தெரியாமல், இன்று, ஒன்பதாவது முறையாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்க பூல் பாண்டியன் கலெக்டர் அலுவலகம் வந்தார்.

அவரை கண்ட அதிகாரிகள், அவருக்கு விருது கிடைத்த தகவலை கூறி கலெக்டரிடம் அழைத்து சென்றனர்.

தான் கொண்டு வந்த ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிதியாக, கலெக்டரிடம் பூல் பாண்டியன் வழங்க, அவருக்கு அறிவித்த விருதை வழங்கி கலெக்டர் கவுரவித்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே