ரயில்வேயை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து பிரதமர் மோடிக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
151 பயணிகள் ரயில்களை இயக்க தனியாருக்கு அழைப்பு விடுத்து ஜூலை 1-ல் ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு இருந்தது.
எனவே ரயில் சேவையை தனியார் மயமாக்கமாட்டோம் என்ற உறுதி மொழியை மத்திய அரசு மீறிவிட்டது என திமுக எம்பி டி.ஆர்.பாலு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 1ல் வெளியிட்ட அறிவிக்கையை திரும்ப பெறுமாறு ஸ்டாலின் சார்பில் டி.ஆர்.பாலு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘பிபெக் டெப்ராய் கமிட்டி பரிந்துரைகளின் அடிப்படையில், 2017ம் ஆண்டில் ரயில்வே சேவையை தனியார்மயமாக்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டபோது, ரயில் சேவை தனியார்மயமாக்க அனுமதிக்கப்படாது என்பதை அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் பாராளுமன்றத்தில் தெளிவாக தெரிவித்து இருந்தனர்.
ஆனால் ஜூலை 1, 2020 அன்று 109 வழித்தடங்களில் 151 பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் தனியாருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது முந்தைய நிலைப்பாட்டிற்கு எதிரானது.
ரயில் சேவையை தனியார் மயமாக்கமாட்டோம் என்ற உறுதி மொழியை மத்திய அரசு மீறிவிட்டது.
அது மட்டுமல்லாமல், ரயில்வே நாட்டின் மலிவான போக்குவரத்து என்பதால், 151 ரயில் சேவைகளை தனியார் மயமாக்குவது ஏழை மக்களின் மீது பொருளாதார ரீதியில் சுமையை ஏற்படுத்தும்.
தனியார் நிறுவனங்களின் போட்டியால், தற்போது ஏர் இந்தியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் திவால்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்பதை நினைவுக் கூற வேண்டும்.
மேலும் தனியாரை அனுமதிப்பதால், லட்சக்கணக்கான பங்குதாரர்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும். எனவே இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்’ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.