உலக சாதனை படைத்துவிட்டு மைதானத்தில் கதறி அழுத குருணால் பாண்டியா

மின்னல் வேகத்தில் அரை சதம் அடித்த அறிமுக வீரர் என்ற சாதனை படைத்த குருணால் பாண்டியா, மைதானத்தில், மறைந்த தந்தையை நினைத்து தனது சகோதரர் ஹர்திக் பாண்டியாவை ஆரத் தழுவி உணர்ச்சிவசத்தில் கண்ணீர் சிந்தினார்.

மின்னல் வேகத்தில் அரை சதம் அடித்த அறிமுக வீரர் என்ற சாதனை படைத்த குருணால் பாண்டியா, மைதானத்தில், மறைந்த தந்தையை நினைத்து தனது சகோதரர் ஹர்திக் பாண்டியாவை ஆரத் தழுவி உணர்ச்சிவசத்தில் கண்ணீர் சிந்தினார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று புனேவில் நடைபெறுகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அறிமுக வீரராக களம் இறங்கினார் குருணால் பாண்டியா. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரும் நட்சத்திர வீரருமான ஹர்திக் பாண்டியாவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.

30 வயதாகும் குருணால் பாண்டியா இன்று ஒரு நாள் போட்டிகளில் அடியெடுத்த வைத்த போது இந்திய அணியின் தொப்பியை அவரின் இளைய சகோதரர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து பெற்றார்.

இந்திய அணி 40 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்து தத்தளித்த போது அறிமுக வீரரான குருணால் பாண்டியா 6வது விக்கெட்டுக்கு பேட்டிங் செய்ய வந்தார், அவருடன் கே.எல்.ராகுல் மறுமுனையில் இருந்தார். அறிமுக போட்டி என்ற சுவடே தெரியாதவாறு சூறாவளியாக சுழன்றடித்த குருணால் பாண்டியா, 26 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார்.

அறிமுக வீரர் ஒருவர் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வகையில் இது உலக சாதனையாகும். முன்னதாக நியூசிலாந்தின் ஜான் மோரிஸ் 35 பந்துகளில் அரை சதம் கண்டிருந்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது. குருணால் பாண்டியா இன்று அதனை முறியடித்தார்.

6வது விக்கெட்டுக்கு குருணால் பாண்டியா – கே.எல்.ராகுல் ஜோடி 112 ரன்கள் குவித்தது. இறுதி வரை களத்தில் இருந்த குருணால் பாண்டியா 31 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணியின் பேட்டிங் முடிந்ததும் குருணால் பாண்டியாவிடம் இந்த சாதனை குறித்து முரளி கார்த்திக் கேட்ட போது, “இது என் தந்தைக்காக” என்று கூறிய நிலையில் அவரால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தமுடியவில்லை அதன் பின்னர் அழுகத்தொடங்கினார். உடனே அங்கு வந்த அவருடைய இளைய சகோதரர் ஹர்திக் பாண்டியா அவரை கட்டித்தழுவி அவருக்கு ஆறுதல் கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் தான் குருணால் – ஹர்திக் பாண்டியா சகோதரர்களின் தந்தை ஹிமன்ஷு பாண்டியா மாரடைப்பால் காலமானார். இருவரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் அடித்தளமிட்டவர் ஹிமன்ஷூ தான் என்பதால் இந்த உலக சாதனையை படைத்த போது அவருடைய தந்தையை எண்ணிப்பார்த்து உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் குருணால் பாண்டியா.

குருணால் பாண்டியாவின் அழுகை, இந்திய வீரர்களை உணர்ச்சிவசப்படுத்தியது. பலரும் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினர்.

இதனிடையே 2வது பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்துடனான ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பந்து வீச்சில் தனது முதல் விக்கெட்டையும் குருணால் பாண்டியா இந்த போட்டியில் பெற்றார். சாம் கரணை அவர் அவுட் ஆக்கினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே