அதிக சிக்ஸர்களை விட்டுக்கொடுத்த இந்திய பவுலர்: குல்தீப் யாதவின் மோசமான சாதனை!

ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை விட்டுக்கொடுத்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகியிருக்கிறார் குல்தீப் யாதவ்.

2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த இமாலய இலக்கை ஈஸியாக துரத்திப்பிடித்து வெற்றிபெற்றது இங்கிலாந்து அணி. இந்த வெற்றியில் பெரும் பங்கு கொண்டிருப்பவர்கள் இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும், குருணால் பாண்டியாவும் தான். ஒரு பக்கம் கே.எல்.ராகுல் அடித்த சதம் வீணானது.

2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் குவித்த போதிலும் 39 பந்துகள் மிச்சம் இருக்கையில் அனாயசமாக 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது இங்கிலாந்து அணி. இந்திய பந்துவீச்சை தவிடுபொடியாக்கி இங்கிலாந்துக்கு வெற்றி தேடித்தந்தனர் ஜானி பேர்ஸ்டோவும், பென் ஸ்டோக்ஸும். இருவரின் பார்ட்னர்ஷிப்பில் இங்குலாந்துக்கு 165 ரன்கள் சேர்ந்தது.

இந்தப் போட்டியில் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் 8 சிக்ஸர்களை இங்கிலாந்து வீரர்கள் பறக்க விட்டனர். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை விட்டுக்கொடுத்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் குல்தீப் யாதவ்.

முன்னதாக வினய் குமார் 7 சிக்ஸர்களை விட்டுக்கொடுத்ததே இந்திய பந்துவீச்சாளரின் மோசமான சாதனையாக இருந்தது. வினய் குமார் 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 7 சிக்ஸர்களை விட்டுக்கொடுத்தார்.

2வது ஒருநாள் போட்டியில் 10 ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ் மொத்தமாக 84 ரன்களை தாரைவார்த்தார்.
குல்தீப்பின் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 4, பேர்ஸ்டோ 3, ஜேசன் ராய் ஒரு சிக்ஸர்களை பறக்க விட்டனர்.

இதனிடையே ஆல் ரவுண்டரான குருணால் பாண்டியா 6 ஓவர்களில் 72 ரன்களை தாரை வார்த்தார். இதில் ஒரே ஓவரில் 278 ரன்கள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குருணால் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் 16 ஓவர்களில் 156 ரன்களை தாரை வார்த்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே